தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவமனையிலிருந்து அரியணை

1 mins read
775d82ae-50b2-4e18-a4b7-0acd4854644d
போராடி வெல்வதை உயிர்நாடியாகக் கொண்டுள்ள மலேசிய சுவர்ப்பந்துத் தங்கமகள் சிவசங்கரி சுப்ரமணியம். - படம்: ஹாங்ஜோ ஆசிய விளையாட்டுகள்

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுகளின் பெண்கள் ஒற்றையர் சுவர்ப்பந்துப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியம்.

வாழ்க்கையில் போராடி வெல்வதை உயிர்நாடியாகக் கொண்டுள்ள இவர் விளையாட்டிலும் அதே வீரியத்துடன் களமிறங்கி வாகை சூடினார். இறுதியாட்டத்தில் ஹாங்காங்கின் சான் சின் யுக்கை 8-11, 15-13, 10-12, 11-9, 12-10 எனும் ஆட்டக்கணக்கில் வென்றார் 24 வயது சிவசங்கரி.

ஆட்டத்தில் பலமுறை தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டுவந்து வென்ற இவர், கோர்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டக் கல்வி பயில்கிறார்.

2022ஆம் ஆண்டு மோசமான கார் விபத்துக்கு ஆளான பிறகு சிவசங்கரியின் முகத்திலும் முதுகெலும்பின் ஒரு பகுதியிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பின்னர் இரண்டு மாதங்களில் பலமுறை இவரால் சொந்தமாகக் குளிக்ககூட முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் மீண்டு வரவேண்டும் என்ற துடிப்புடன் இருந்த சிவசங்கரி, நான்கே வாரங்களில் எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கிவிட்டார். சுமார் ஓராண்டுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றார். பெண்கள் சுவர்ப்பந்துக் குழுப் பிரிவிலும் சிவசங்கரி இடம்பெற்ற மலேசிய அணி தங்கம் வென்றது.

அமெரிக்கப் பொதுவிருதுப் போட்டியில் பங்கேற்க சனிக்கிழமையன்றே ஃபிலடெல்ஃபியா நகருக்குப் பயணம் மேற்கொள்கிறார் இவர்.

“இரண்டு தங்கப் பதக்கங்ளை வென்ற திருப்தியுடன் நான் செல்கிறேன். தோல்வியடைந்து அழுதுகொண்டே போகவில்லை. விமானத்தில் நிம்மதியான தூக்கமாவது எனக்கு இருக்கும்,” என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சிவசங்கரி.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்