தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனது சாதனையை சமன் செய்த கோஹ்லிக்கு சச்சின் புகழாரம்

2 mins read
03609350-e258-4129-a778-be30796986d1
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்ததைக் கொண்டாடிய விராத் கோஹ்லி. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

கோல்கத்தா: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49வது முறையாக சதமடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார் இந்தியாவின் நட்சத்திரப் பந்தடிப்பாளர் விராத் கோஹ்லி.

கோல்கத்தாவின் ஈடன் கார்டர்ன்சில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னாப்பிரிக்கா உடனான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண முதல் சுற்று ஆட்டத்தில் சதமடித்த கோஹ்லி (101 ஓட்டங்கள்), கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நகைச்சுவையுடன் தெரிவித்துக்கொண்டார் சச்சின்.

“சிறப்பாக ஆடினீர்கள் விராத். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 49லிருந்து 50க்குப் போக எனக்கு 365 நாள்கள் தேவைப்பட்டன. அடுத்த சில நாள்களில் நீங்கள் 49ஐத் தாண்டி 50ஐத் தொட்டு எனது சாதனையை முறியடிப்பீர்கள் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன். வாழ்த்துகள்!” என்று எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக ஊடகத்தில் பதிவிட்டார் சச்சின். தனது வயதையும் கோஹ்லியின் சாதனையையும் ஒப்பிட்டுப் பேசினார் சச்சின்.

சச்சினுடன் பலர் கோஹ்லிக்குத் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

குறிப்பாக தனது 35வது பிறந்தநாளன்று சதமடித்து சச்சின் சாதனையை சமன் செய்திருப்பது கோஹ்லிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது.

சச்சினுக்கும் வினோத் காம்ப்ளிக்கும் அடுத்ததாக, பிறந்தநாளன்று சதமடித்துள்ள மூன்றாவது இந்தியப் பந்தடிப்பாளராக கோஹ்லி திகழ்கிறார்.

நடப்பு உலகக் கிண்ணப் போட்டியில் பங்ளாதேஷ் அணிக்கு எதிராக ஏற்கெனவே சதமடித்த கோஹ்லி (103 ஓட்டங்கள்), நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் சதமடிக்கத் தவறினார்.

சச்சினுக்கு அடுத்ததாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3,000 ஓட்டங்களைக் குவித்துள்ள இரண்டாவது இந்திய வீரராகவும் கோஹ்லி விளங்குகிறார்.

அத்துடன், ஒரே உலகக் கிண்ணப் போட்டியில் 500 ஓட்ட எண்ணிக்கையை கோஹ்லி முதன்முறையாகக் கடந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்