லாஸ் ஏஞ்சலிஸ்: அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி, 2023ஆம் ஆண்டின் ஆகச் சிறந்த விளையாட்டு வீரராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
‘டைம்’ சஞ்சிகை வழங்கும் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் 36 வயது மெஸ்ஸி.
அண்மையில் எட்டாவது முறையாக ஆண்டின் ஆகச் சிறந்த காற்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டுவோர் விருதை மெஸ்ஸி வென்றார். காற்பந்து வரலாற்றில் வேறு எந்த வீரரும் இத்தனை முறை பலோன் டுவோர் விருதை வென்றதில்லை.
மேலும், கத்தாரில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜென்டினா வாகை சூடியது. அதன் அணித்தலைவராக விளங்கும் மெஸ்ஸி அப்போட்டியில் சிறப்பாக விளையாடி அர்ஜென்டினாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
36 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது அர்ஜென்டினா.
அதோடு மெஸ்ஸி அமெரிக்காவின் இன்டர் மயாமி குழுவில் சேர்ந்தார். அதன் மூலம் அந்நாட்டில் காற்பந்து மோகம் சூடுபிடித்தது.