வெற்றிப் பயணத்தைத் தொடரும் லிவர்பூல்

வெற்றிப் பயணத்தைத் தொடரும் லிவர்பூல்

2 mins read
23516835-cc16-4f7a-84c2-1b0797023d94
நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூலின் மூன்றாவது கோலைப் போடும் காக்போ (வலது). - படம்: இபிஏ
multi-img1 of 2

லிவர்பூல்: நியூகாசல் யுனைடெட்டுக்கு எதிரான இங்கிலி‌ஷ் பிரிமியர் லிக் காற்பந்தாட்டத்தில் 4-2 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது லிவர்பூல்.

முகம்மது சாலா, கர்ட்டி‌ஸ் ஜோன்ஸ், கொடி காக்போ ஆகியோர் லிவர்பூலின் கோல்களைப் போட்டனர். இரண்டு கோல்களைப் போட்டார் சாலா.

அலெக்சாண்டர் ஐசாக், ஸ்வென் பொட்மன் இருவரும் நியூகாசலின் கோல்களைப் போட்டனர்.

ஆட்டத்தின் முற்பாதியில் கோல் ஏதும் இல்லை. முற்பாதியாட்டத்தில் சாலா ஒரு பெனால்டி வாய்ப்பை நழுவவும் விட்டார்.

ஆனால் பிற்பாதியாட்டத்தில் கோல் மழை பொழிந்தது. 86வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி லிவர்பூலின் நான்காவது கோலைப் போட்டார் சாலா.

முற்பாதியாட்டத்தில் சந்தித்த ஏமாற்றத்தை சாலா பிற்பாதியாட்டத்தில் ஈடுகட்டியது ஆச்சரியம் இல்லை என்று லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் பெருமைப்பட்டார்.

“ஓர் ஆட்டத்தின் போக்கை சாலா மாற்றக்கூடியவர். அவர் ஆட்டத்தின்போது மேம்படக்கூடியவரும்கூட. இவற்றை அவர் நூற்றுக்கணக்கான முறை செய்துள்ளார். அதனால், ஆச்சரியம் ஏதும் இல்லை,” என்று கூறினார் கிளோப்.

“அவர் ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார். ஒரு விளையாட்டாளர் அதிக கோல் வாய்ப்புகளை நழுவ விடும்போதுதான் அதிக கோல்களையும் போடுவார். அப்போதுதான் தொடர்ந்து களையிழக்காமல் விளையாடவும் மேம்படவும் அந்தந்த சூழல்களை நன்கு சாதகமாக்கிக்கொள்ளவும் என்ன செய்யவேண்டும் என்பது அவருக்குப் புலப்படும். அதைத்தான் சாலா செய்தார்,” என்று விளக்கினார் கிளோப்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து லீக் பட்டியலில் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் லிவர்பூல் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஐந்து லீக் ஆட்டங்களில் நான்கில் தோல்வியடைந்துள்ளது நியூகாசல்.

குறிப்புச் சொற்கள்