சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியின் (லயன்ஸ்) புதிய பயிற்றுவிப்பாளராக ஜப்பானியர் சுடோமு ஒகுரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜாலான் புசாரில் உள்ள சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைமையகத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 1) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜப்பானியர் ஒருவர் லயன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
57 வயது ஒகுரா ஈராண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஜனவரி 29ஆம் தேதியன்று பதவிநீக்கம் செய்யப்பட்ட தக்கயுகி நிஷிகாயாவின் இடத்தை ஒகுரா வகிப்பார்.
நிஷிகாயாவுக்கு முன்பு பயிற்றுவிப்பாளராக இருந்த தத்சுமா யொஷிதா 2021ஆம் அண்டு டிசம்பர் மாதம் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.
ஒகுரா, லயன்ஸ் அணியுடன் 22, 23 வயதுக்கு உட்பட்ட வீரர்களைக் கொண்ட தேசிய அணிகளின் பயிற்றுவிப்பாளராகவும் பொறுப்பு வகிப்பார்.
சென்ற ஆண்டு நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளின் காற்பந்துப் போட்டியில் இளம் வீரர்களுக்கான யங் லயன்ஸ் அணி படுமோசமாக விளையாடியது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் அணிகளின் விளையாட்டை ஆராய சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம், குழு ஒன்றை அமைத்தது. நிலைமையைச் சீராக்க அக்குழு 10 பரிந்துரைகளை முன்வைத்தது.
22, 23 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான தேசிய அணிகளை மூத்த வீரர்களுக்கான அணியின் பயிற்றுவிப்பாளருக்குக்கீழ் கொண்டுவருவது பரிந்துரைகளில் ஒன்று.
2006 முதல் 2010ஆம் ஆண்டு வரை ஒகுரா, ஜப்பான் அணியின் துணைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் ஜப்பான், 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிச் சுற்றுப் போட்டிகளில் இடம்பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பிறகு 2010லிருந்து 2012ஆம் ஆண்டு வரை ஜப்பானின் ஒலிம்பிக் காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தார். 2012ஆம் ஆண்டு லண்டன் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஜப்பான் நான்காவது இடத்தைப் பிடித்தது.
ஒகுரா ஒருமுறை தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்திருக்கிறார். 2013ஆம் ஆண்டில் ஒமியா அர்டிஜா எனும் ஜப்பானிய குழுவின் பயிற்றுவிப்பாளராக அவர் பதவி வகித்தார்.

