சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வழங்கும் ஆகச் சிறந்த விளையாட்டு வீரர் விருதை வென்றுள்ளார்.
இவ்விருதை முதன்முறையாக வென்றிருக்கிறார் சாந்தி. 2009ஆம் அண்டு முதல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இந்த விருதை வழங்கிவருகிறது. 100பிளஸ் நிறுவனம் விருதுக்கு ஆதரவளிக்கிறது.
சென்ற ஆண்டுக்கான விருது வியாழக்கிழமையன்று (மே 9) வழங்கப்பட்டது.
இதர சிங்கப்பூர் விளையாட்டு வீரர்களான நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ, உருட்டுப்பந்து வீராங்கனை செரி டான் உள்ளிட்டோரும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விருதுக்கு முன்மொழியப்பட்டனர்.
2023 தனக்கு மிகவும் பரபரப்பான ஆண்டாக அமைந்தது என்றார் சாந்தி.
“விருதுக்கு முன்மொழியப்பட்ட மற்றவர்கள் அனைவரும் சென்ற ஆண்டு மிகவும் சிறப்பாகச் செய்தனர். அவர்கள் உலகப் போட்டிகளில் வெற்றிபெற்றனர், ஆசிய விளையாட்டுகளில் பதக்கம் வென்றனர். அதனால் இந்த விருது எனக்கு வழங்கப்பட்டது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகும்,” என்று பெருமைபட்டார் சாந்தி.
கம்போடியாவில் நடைபெற்ற சென்ற ஆண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சாந்தி 100, 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்றார். அவற்றிலிருந்து சென்ற ஆண்டுக்கான அவரின் வெற்றிப் பயணம் தொடங்கியது.
பிறகு சென்ற ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிய திடல்தடப் போட்டிகளிலும் 100, 200 மீட்டர் பிரிவுகளில் வாகை சூடினார் சாந்தி.
தொடர்புடைய செய்திகள்
அதன் பின்னர் ஹங்கேரி தலைநகர் புடாப்பெஸ்ட்டில் நடைபெற்ற உலகத் திடல்தடல் போட்டிகளின் அரையிறுதிச் சுற்றுக்கு சாந்தி முன்னேறினார். அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளில் 200 மீட்டர் பிரிவில் வாகை சூடினார்.
100 மீட்டர் பிரிவில் தேசிய சாதனையை ஆறு முறை முறியடித்துள்ளார் சாந்தி. 200 மீட்டர் பிரிவில் நான்கு முறை சாதனை படைத்திருக்கிறார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விளையாட்டுப் பிரிவின் ஆசிரியர் லின் பூங் உட்பட எழுவரைக் கொண்ட நடுவர்கள் குழு வெற்றியாளரைத் தெரிவுசெய்தது.