சிங்கப்பூர் விளையாட்டு விருதுகளில் தேசிய ஓட்டப் பந்தய வீராங்கனையாக சாந்தி பெரேரா உயரிய விருதைப் பெற்றுள்ளார்.
அவரின் பயிற்றுவிப்பாளரான லூயிஸ் குன்யாவுக்கும் அந்த அங்கீகாரம் கிடைத்தது.
2023ஆம் ஆண்டின் ஆகச் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை சாந்தி தட்டிச் சென்றார். அதேபோல் ஆண்டின் ஆகச் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதைப் பெற்றார் குன்யா.
இருவரும் சென்ற ஆண்டு மிகச் சிறப்பாகச் செய்ததற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
விருதுகள் திங்கட்கிழமையன்று (ஜூன் 3) வழங்கப்பட்டன. சாந்தி முதன்முறையாக ஆகச் சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.
அதோடு, 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்விருதை வென்றுள்ள முதல் திடல்தட வீரர் என்ற பெருமையையும் அவரைச் சேரும். 2004ல் ஜேம்ஸ் வோங் ஆண்டின் ஆகச் சிறந்த விளையாட்டு வீரர் விருதைக் கைப்பற்றினார்.
பெண்களில் இந்த விருதைக் கடைசியாக வென்றார் கந்தசாமி ஜெயமணி. அவர் 1977, 1981ஆம் ஆண்டுகளில் விருதைக் கைப்பற்றினார்.
விருது நிகழ்ச்சி ஆர்சர்ட் ஹோட்டலில் நடைபெற்றது. ஒலிம்பிக் விளையாட்டுகளுக்காக ஐரோப்பாவில் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் சாந்தி நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போனது.
தொடர்புடைய செய்திகள்
படகோட்டும் வீராங்கனை ஸ்டெஃபனி சென், வூஷூ தற்காப்புக் கலை வீராங்கனை கிம்பர்லி ஓங், நீச்சல் வீராங்கனை லட்டிஷியா சிம் உள்ளிட்டோரைப் பின்னுக்குத் தள்ளி வாகை சூடினார் சாந்தி.
“எனது பயிற்றுவிப்பாளருக்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். ஆண்டுக்கான ஆகச் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதைப் பெற அவர் மிகவும் தகுதிவாய்ந்தவர். அதனால் எனது பயணத்தில் அவரின் முயற்சிகளும் சிங்கப்பூர் திடல்தட விளையாட்டுச் சூழல், எனக்கு இருக்கும் ஒட்டுமொத்த ஆதரவு ஆகியவற்றில் அவர் ஏற்படுத்திய தாக்கமும் அங்கீகரிக்கப்பட்டதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி,” என்று 27 வயது சாந்தி கூறினார்.
சென்ற ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பெண்கள் 100, 200 மீட்டர் பந்தயங்களில் சாந்தி தங்கம் வென்றார். பின்னர் ஆசிய திடல்தடப் போட்டிளிலும் அவர் இவ்விரு பிரிவுகளிலும் வெற்றிபெற்றார்.
சீனாவின் ஹாங்ஜூ நகரில் நடைபெற்ற கடந்த ஆசிய விளையாட்டுகளின் 200 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார் சாந்தி. 100 மீட்டர் பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆண்டின் ஆகச் சிறந்த விளையாட்டு வீரர் விருதைப் பெற்றார் உருட்டுப் பந்து வீரர் டேரன் ஓங். 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்விருதை வென்ற முதல் உருட்டுப் பந்து வீரர் என்ற பெருமையை டேரன் பெற்றுள்ளார்.