காஸாவில் தினமும் சில மணி நேரம் போர் நிறுத்தம்

2 mins read
bda9005d-ac6f-4fa6-a301-95f2529f9966
உதவிப்பொருள்கள் சரியாக மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இதை இஸ்ரேல் செய்வதாக கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: காஸாவின் தென்பகுதியில் தினமும் சில மணி நேரம் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ஜூன் 16 (ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

உதவிப்பொருள்கள் சரியாக மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இதை இஸ்ரேல் செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து ஐக்கிய நாட்டு நிறுவனம் உட்பட சில அமைப்புகளுடன் இஸ்ரேல் பேசியதாகவும் நம்பப்படுகிறது.

போரால் காஸாவில் கடுமையான பஞ்சம் பட்டினி ஏற்படும் என்று கடந்த சில காலங்களாகவே பல அமைப்புகள் குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்மையில் 8 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் வெடிப்புச் சம்பவத்தில் மாண்டனர். இதுவும் புது அறிவிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு, உதவி பொருள்கள் கொண்டு செல்லப்படும் சாலைகளில் ராணுவ நடவடிக்கைகள் நடக்காது. உதவிப்பொருள்கள் கொண்டு செல்வதற்கான வரைபடத்தையும் இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை எந்த விதமான வான்வழித் தாக்குதல், ராணுவ நடவடிக்கைகள் ஏதும் இடம்பெறவில்லை என்று ஏஎஃப்பி செய்தியாளரும் தெரிவித்தார். 

இந்நிலையில் மேற்கு கரையில் வாழும் பாலஸ்தீனர்கள் பொருளியல் ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ளதாகக் கவலைத் தெரிவித்துள்ளனர்.

போர் காரணமாக இஸ்ரேலுக்குள் செல்ல பல பாலஸ்தீனர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் போதிய வருமானம் இல்லாமல் மேற்கு கரையில் வாழும் பாலத்தீனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் ‘ஏடிஎம்’ நிலையங்களில் போதுமான அளவில் பணம் இல்லை என்றும் அவர்கள் குறைகூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்