பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அரங்கேறிவரும் இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளின் பூப்பந்துப் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூர் நட்சத்திரம் லோ கியன் இயூ, காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலகத் தரவரிசையில் 50வது இடத்தில் இருக்கும் உரியெல் காஞ்சுராவை 21-13, 21-16 எனும் ஆட்டக்கணக்கில் வெற்றிபெற்ற பிறகு லோ அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். உலகத் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள லோ, எல் செல்வடோரைச் சேர்ந்த உரியெல் காஞ்சுராவைப் போராடி வெல்லவேண்டியிருந்தது.
உரியெல் காஞ்சுரா, ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிடும் முதல் எல் சால்வடோர் வீரர் ஆவார். அவரை வென்றது, லோ ‘எம்’ பிரிவில் முதலிடத்தைப் பிடிக்க வகைசெய்தது.
இதற்கு முன்பு கடைசியாக 2004ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில்தான் சிங்கப்பூர் வீரர் ஒருவர் முதல் சுற்றைத் தாண்டினார். கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூரின் ரானல்ட் சுசிலோ காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இவ்வாண்டு ஒலிம்பிக்கில் இனி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள லீ ஷிஃபெங்குடன் மோதுவார் லோ.