பாரிஸ்: இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தார் சிங்கப்பூர் பேட்மிண்டன் நட்சத்திரம் லோ கியன் இயூ.
ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லோ, உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் சீனாவின் லி ஷிஃபெங்கை வென்று அசத்தினார். உலகத் தரவரிசையில் 12வது இடத்தை வகிக்கிறார் லோ.
ஆனால் மகிழ்ச்சியின் உச்சியைத் தொட்ட பிறகு காலிறுதிச் சுற்றில் லோ ஏமாற்றத்தைச் சந்தித்தார். டென்மார்க்கைச் சேர்ந்த விக்டர் ஆக்சல்சனிடம் அவர் தோல்வியடைந்தார்.
இதற்கு முன்பு லோ, ஆக்சல்சனை இருமுறை வென்றிருந்தார்.
ஒலிம்பிக் காலிறுதிச் சுற்றில் 3-7 எனும் ஆட்டக்கணக்கில் தோற்றுக்கொண்டிருந்தபோது லோவின் வலது கையில் காயம் ஏற்பட்டது. வலுவாகக் கட்டு போடப்பட்ட பிறகு கையிலிருந்து ரத்தம் வழிவது நின்றது. ஆனால், அதற்குப் பிறகு லோ சரியாக விளையாட முடியாமல் போனது.
இறுதியில் 21-9, 21-17 எனும் ஆட்டக்கணக்கில் சிங்கப்பூரின் நம்பிக்கை நட்சத்திரம் தோல்வியடைந்தார்.
இதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில்தான் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரர் ஒருவர் காலிறுதிச் சுற்றுவரை முன்னேறியிருந்தார். ரானல்ட் சுசிலோ அந்தப் பெருமைக்குரியவர்.
தோல்வியைத் தொடர்ந்து இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளிலிருந்து வெளியேறும் லோ, “ஆம், இது ஒலிம்பிக் விளையாட்டுகளாக இருப்பதால் மனமுடைந்துவிட்டேன்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் திருப்தியாக இருக்கிறேன் என்றும் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம். என்னால் முடிந்தவரை நன்றாக விளையாடிது, இவ்வளவு தூரம் முன்னேறியது ஆகியவற்றை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். அதேவேளை, இதற்கு மேல் முன்னேற முடியவில்லை என்பது என்னை மனமுடையச் செய்கிறது. (போட்டியில்) இந்த ஆட்டத்தில் மட்டும்தான் என்னால் அவ்வளவு சிறப்பாக விளையாட முடியவில்லை. இன்னும் சிறப்பாக விளையாட விரும்பினேன்,” என்று லோ வருத்தம் தெரிவித்தார்.