மார்செய்: இவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் அலையாடல் (கைட்ஃபோய்லிங்) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் சிங்கப்பூரின் 17 வயது வீரர் மேக்சிமிலியன் மெய்டர்.
மேலும், ஒலிம்பிக் வரலாற்றில் சிங்கப்பூர் வென்றிருக்கும் ஆறாவது ஒலிம்பிக் பதக்கம் இது.
அண்மை ஆண்டுகளில் மிகவும் சிறப்பாகச் செய்துவந்த மேக்சிமிலியன், ஒலிம்பிக் பதக்கம் வென்றதில் ஆச்சரியம் இல்லை என்று கூறப்படுகிறது. எனினும், ஒலிம்பிக்கில் அவர் இதுவரை இல்லாத அளவில் சவால்களை எதிர்நோக்கினார்.
இப்போட்டியில் ஆஸ்திரியாவின் வேலன்டின் பொன்டஸ் தங்கம் வென்றார். சுலோவேனியாவின் டோனி வொடிசெக் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
மேக்சிமிலியனுக்கு சிங்கப்பூர் பிரதமர் லராரன்ஸ் வோங் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். சிங்கப்பூருக்குப் பிறந்தநாள் பரிசு வழங்கியதற்கு பிரதமர் வோங், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேக்சிமிலியன், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஆக இளம் சிங்கப்பூரர் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.