ஒலிம்பிக் போட்டிகள்: பாரிஸ் விடைபெற்றது, வரவேற்கிறது லாஸ் ஏஞ்சலிஸ்

2 mins read
a7130444-0d73-4a53-89b6-f0b7329dac75
இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சி. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அரங்கேறிய இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்துவிட்டது.

நிலையற்ற அரசியல் சூழலை எதிர்கொள்ளும் பிரான்ஸ், அனல் காற்று, பாதுகாப்பு அபாயங்கள் போன்ற அச்சுறுத்தல்களைக் கையாண்டு உலகின் ஆகப் பெரிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. மேலும், பாரிஸ்வாசிகளிடையே விளையாட்டுகளுக்கான வரவேற்பும் அதிகம் இல்லாதிருந்தது.

அத்தகைய சவால்களை மீறி இவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடந்தேறின. 200 நாடுகள், பகுதிகள் ஆகியவற்றைச் சேர்ந்த 10,700க்கும் அதிகமான விளையாட்டாளர்கள் இவ்வாண்டின் ஒலிம்பிக்கில் இடம்பெற்ற 32 விளையாட்டுகளில் போட்டியிட்டனர்.

தொடர்ந்து நான்காவது முறையாக ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது அமெரிக்கா. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று (11 ஆகஸ்ட்) இடம்பெற்ற இறுதிப் போட்டியில்தான் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துக்கொண்டது.

அமெரிக்கா, இரண்டாவது இடத்தில் முடித்த சீனா இரண்டும் தலா 40 தங்கப் பதக்கங்களை வென்றன. ஒட்டுமொத்தமாக கூடுதல் பதக்கங்களை வென்றதால் அமெரிக்கா முதலிடத்தில் முடித்தது.

16 தங்கப் பதக்கங்கள், 26 வெள்ளிப் பதக்கங்கள், 22 வெண்கலப் பதக்கங்களை வென்ற ஒலிம்பிக்கை ஏற்று நடத்திய பிரான்ஸ், ஆறாவது இடத்தில் முடித்தது.

1900ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு இதுவே பிரான்ஸ் ஆகச் சிறப்பாகச் செய்துள்ள ஒலிம்பிக் ஆகும். 1900ஆம் ஆண்டு போட்டிகளும் பாரிசில் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமையன்று இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியில் ஒலிம்பிக் கொடியை மோட்டார்சைக்கிளில் ஏந்திச் சென்ற ஹாலிவுட் நடிகர் டாட் குரூஸ்.
நிறைவு நிகழ்ச்சியில் ஒலிம்பிக் கொடியை மோட்டார்சைக்கிளில் ஏந்திச் சென்ற ஹாலிவுட் நடிகர் டாட் குரூஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடக்கும். பொறுப்பை அந்நகரிடம் ஒப்படைக்கும் சடங்கும் நிறைவு நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்