மீண்டும் பயிற்றுவிப்பாளராகக் களமிறங்க விரும்பும் சுந்தரமூர்த்தி

2 mins read
747d4ecf-c278-40ca-bc94-8349a21b0d69
2013ஆம் ஆண்டில் லயன்ஸ் குழுவின் பயிற்றுவிப்பாளராக வி. சுந்தரமூர்த்தி பதவி வகித்தார். அந்த ஆண்டில் லயன்ஸ் குழு மலேசிய சூப்பர் லீக் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 2016ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளராகவும் சுந்தரம் இருந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பயிற்றுவிப்பாளராகக் களமிறங்க சிங்கப்பூரின் முன்னாள் காற்பந்து நட்சத்திரம் வி. சுந்தரமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.

பயிற்றுவிப்பாளர் என்கிற முறையில் ஆகக் கடைசியாக 2018ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை லாவோஸ் காற்பந்துக் குழுவை அவர் வழிநடத்தினார்.

அதையடுத்து, லாவோஸ் காற்பந்துச் சம்மேளனத்தின் தொழில்நுட்ப இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார்.

ஆனால் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்ட நாள்களைப் பற்றி எண்ணி தாம் ஏங்குவதாக 59 வயது சுந்தரம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

“லாவோஸ் காற்பந்துச் சம்மேளனத்தின் தொழில்நுட்ப இயக்குநராக இருக்கிறேன், எனது பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவுபெறுகிறது. அதை அடுத்து, ஏதேனும் ஒரு தேசிய காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளராக இருக்க விரும்புகிறேன். அது சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனீசியா போன்ற நாடுகளின் தேசிய காற்பந்துக் குழுவாக இருக்கலாம். மீண்டும் களமிறங்க இலக்கு கொண்டுள்ளேன்,” என்றார் சுந்தரம்.

காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளராக மீண்டும் பொறுப்பேற்று சாதிக்க முனைப்புடன் காத்துக்கொண்டிருக்கிறேன். பழைய நினைவுகள் என்னைச் சுண்டி இழுக்கிறது. பயிற்றுவிப்பாளர் என்கிற முறையில் செய்தியாளர் கூட்டங்களில் கலந்துகொள்வது, செய்தியாளர்களிடம் பேசுவது, ரசிகர்களைச் சந்திப்பது, குழுவை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என ஏற்படும் அழுத்தம் என் நினைவில் பசுமரத்தாணியைப் போல் பதிந்துவிட்டது. அவற்றை மீண்டும் அனுபவிக்க வேண்டும் என விழைகிறேன்.

2013ஆம் ஆண்டில் லயன்ஸ் குழுவின் பயிற்றுவிப்பாளராக சுந்தரம் பதவி வகித்தார்.

அந்த ஆண்டில் லயன்ஸ் குழு மலேசிய சூப்பர் லீக் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளராகவும் சுந்தரம் இருந்தார்.

“வயது அதிகரித்த நிலையில், வாழ்க்கைப் பாதையைப் பற்றி நினைத்துப் பார்க்கிறோம். அதைக் கற்றல் பயணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கைப் பயணம் மிகவும் அழகானது,” என்றார் சுந்தரம்.

சிங்கப்பூரில் நடைபெற்ற பிஓய்டி காற்பந்துப் போட்டிக்காக சுந்தரம் சிங்கப்பூர் வந்திருந்தார்.

சனிக்கிழமை (பிப்ரவரி 22) ஏஆர்எஃப்சி உட்லீயில் நடைபெற்ற நட்புமுறை ஃபுட்சால் போட்டியில் பங்கெடுத்த குழுவுக்கும் சுந்தரம், சிங்கப்பூரின் முன்னாள் நட்சத்திர காற்பந்து வீரரான ஃபாண்டி அகமது, மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முன்னாள் நட்சத்திர வீரர் ரயன் கிக்ஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்