இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்கத் தாய்லாந்து சென்ற முதியவர்

3 mins read
சிங்கப்பூரில் 2015 தென்கிழக்காசிய விளையாட்டுகள் நடந்தபோது ஸ்போர்ட்எஸ்ஜி அமைத்த ‘டீம் நிலா’ தொண்டூழியரணி, கடந்த பத்து ஆண்டாகச் சிங்கப்பூரின் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் உறுதுணையாக இருந்துவந்துள்ளது.
8c7f97bc-0f30-47bc-9724-c02b7ea5c6e0
பத்து ஆண்டுகளாக ‘டீம் நிலா’ தொண்டூழியராக இருந்துவரும் வேலப்பகுட்டி ஜகன், 72, சிங்கப்பூரின் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கத் தாய்லாந்துக்குச் சென்றுள்ளார். - படம்: ரவி சிங்காரம்

இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்கு 130க்கும் மேற்பட்ட ‘டீம் நிலா’ தொண்டூழியர்கள் தாய்லாந்து சென்று சிங்கப்பூரின் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளித்துவருகின்றனர்.

அவர்களில் ஒருவர், டீம் நிலா 2015ல் தொடங்கியதிலிருந்து அதில் தொண்டூழியராக இருந்துவந்துள்ள 72 வயது வேலப்பகுட்டி ஜகன். சிறுவயதிலிருந்தே திடல்தட வீரராக இருந்துள்ள திரு ஜகன், 42 கிலோமீட்டர் நெடுந்தொலைவோட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.

டீம் நிலா தொண்டூழியர் வேலப்பகுட்டி ஜகன், 72, தன் முதல் காதல் திடல்தட விளையாட்டுகளே என்றார்.
டீம் நிலா தொண்டூழியர் வேலப்பகுட்டி ஜகன், 72, தன் முதல் காதல் திடல்தட விளையாட்டுகளே என்றார். - படம்: ரவி சிங்காரம்

‘நெப்டியூன் ஓரியண்ட் லைன்ஸ்’ கப்பலின் கேப்டனாகப் பல்லாண்டாகப் பணிபுரிந்து, பின்பு கடல்துறையில் சுயவர்த்தகமும் நடத்திவந்த அவர், பணியிலிருந்து ஓய்வை நெருங்கும்போது டீம் நிலாவில் சேர்ந்தார்.

2015 தென்கிழக்காசிய விளையாட்டுகள், 2015 உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகள் ஆகியவற்றில் ‘டீம் நிலா’ தொண்டூழியராகத் தொடங்கி, இன்றுவரை மாதந்தோறும் குறைந்தது 30 மணி நேரம் தொண்டாற்றியுள்ளார் திரு ஜகன்.

கொவிட்-19 காலத்தில், ‘டீம் நிலா’ குழுவினருடன் வீடு வீடாகச் சென்று முகக்கவசம், கைச்சுத்திகரிப்பான் போன்றவற்றை விநியோகித்த அவருக்குப் பொதுச் சேவை விருதும் (கொவிட்-19) வழங்கப்பட்டது.

அண்மையில் சிங்கப்பூர்க் காற்பந்து அணி ஹாங்காங்கை வென்று ஏஎஃப்சி ஆசியக் காற்பந்துக் கிண்ணத்துக்குத் தகுதிபெற்றபோது அவர்களை விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார் திரு ஜகன்.

“ஜோசஃப் ஸ்கூலிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று திரும்பியபோதும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றது மறக்கமுடியாத அனுபவம். அவரது மாமாவும் கடல்துறையைச் சார்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்துக்கும் எனக்கும் நல்ல பழக்கம். விமான நிலையத்தில் அவர்களையும் கண்டேன்,” என்றார் திரு ஜகன். நீச்சல் வீரர்களான குவா சகோதரர்களையும் சிறுவயதிலிருந்து கண்டுள்ளதாகவும் அவர்களின் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார் திரு ஜகன்.

ஈஸ்ட் கென்பரா வட்டாரம் 4ன் குடியிருப்பாளர்க் குழுவின் துணைத் தலைவராகவும் அவர் சேவையாற்றுகிறார். அண்மையில் ஐந்து ஆண்டு நெடுங்காலச் சேவை விருதும் அவருக்குக் கிடைத்தது.

நெடுங்கால ஆசை

2017 தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்காகக் கோலாலம்பூருக்குச் சென்ற திரு ஜகனால் கடந்த எட்டு ஆண்டாகத் தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்குப் போக இயலவில்லை. 2023ல் கம்போடியா செல்லவிருந்த அவர், புறப்படுவதற்கு ஒரு வாரம் முன் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டார்.

அதனால் இவ்வாண்டு பேங்காக்கிற்கு எப்படியாவது செல்ல வேண்டும் என ஆசைப்பட்டார். “எஸ்ஜி50ஐ 2015ல் கண்டேன். எஸ்ஜி60 என் மனதுக்கு நெருக்கமானது,” என்றார் திரு ஜகன்.

இதற்கெனக் கடந்த சில மாதங்களாக அவரும் சக தொண்டூழியர்களும் பல்வேறு விதமான பாடல்களைக் கற்றுப் பயிற்சி செய்துள்ளனர்.

எனினும், பேங்காக்கிற்குச் செல்லும் ஆசையைக் காட்டிலும் தமது 96 வயது தாயார்மீதான அக்கறை திரு ஜகனுக்கு அதிகம். பல்லாண்டாக அவர் தாயாரைப் பராமரித்துவந்துள்ளார். பேங்காக்குக்குச் செல்லும் வேளையில் தன் தாயாரால் தனியாகச் சமாளிக்கமுடியுமோ என்ற அச்சம் இருந்தது. அதனால், தாய்லாந்துக்குச் செல்லத் தயக்கம் இருந்தது.

“நான் பேங்காக் செல்லவிருப்பதைத் தாயாரிடம் கூறியபோது அவருக்கும் அதில் உடன்பாடு இருந்தது. அவருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டுத்தான் நான் புறப்பட்டேன்,” என்றார் திரு ஜகன்.

ஏதேனும் அவசரம் என்றால் உடனடியாக வந்து உதவக்கூடிய சகோதரர்கள், உறவினர்கள், நல்ல நண்பர்கள் இருப்பதால் அவர்களை நம்பி திரு ஜகனால் மன நிம்மதியுடன் பேங்காக் செல்லமுடிந்தது. டிசம்பர் 12 முதல் 16 வரை திரு ஜகன் பேங்காக்கில் இருப்பார்.

தாய்லாந்து சென்ற முதல் நாளிலேயே நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்குச் சென்று ஆதரவளிக்க முடிந்தது. இளம் நீச்சல் வீரர்கள் சிங்கப்பூருக்காகத் தங்கப் பதக்கங்கள் வெல்வதை நேரில் காணும்போது அளவற்ற மகிழ்ச்சியைப் பெற்றார் திரு ஜகன்.

“அவர்களின் ஒவ்வொரு சாதனையையும் நாங்கள் அணியாகப் பாராட்டி ஊக்குவித்தோம். இவ்வாண்டு நம் விளையாட்டு வீரர்கள் மிகவும் இளம்வயதினராக உள்ளனர். என்னைப் போன்ற முன்னோடித் தலைமுறையினராலும் அவர்களுக்கு ஆதரவு வழங்கமுடியும்,” என்றார் திரு ஜகன்.

தாய்லாந்தில் சக ‘டீம் நிலா’ தொண்டூழியர்களுடன் வேலப்பகுட்டி ஜகன் (வலம்).
தாய்லாந்தில் சக ‘டீம் நிலா’ தொண்டூழியர்களுடன் வேலப்பகுட்டி ஜகன் (வலம்). - படம்: வேலப்பகுட்டி ஜகன்
எஸ்ஜி60 ஆண்டில் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்ற நினைவுகளுடன் நம் நாட்டின் பயணத்தையும் தொடர்புப்படுத்திப் பின்னோக்கிப் பார்ப்பேன்.
‘டீம் நிலா’ தொண்டூழியர் வேலப்பகுட்டி ஜகன்
குறிப்புச் சொற்கள்