233 தங்கத்துடன் ‘சீ’ விளையாட்டுகளில் பேராதிக்கம் செலுத்திய தாய்லாந்து

2 mins read
3038a2f2-fe87-4525-8170-c88cf6de3014
தென்கிழக்காசிய விளையாட்டுகள் சம்மேளனத்தின் அதிகாரபூர்வக் கொடியைத் தாய்லாந்து ஏற்பாட்டுக் குழுவினரிடமிருந்து பெற்று அதை உற்சாகத்துடன் அசைக்கிறார், 34வது தென்கிழக்காசிய விளையாட்டுகளை ஏற்று நடத்தும் மலேசியாவின் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் முகமது தவ்ஃபிக் ஜொஹாரி. - படம்: பெரித்தா ஹரியான்

பேங்காக்: டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கிசனிக்கிழமை (டிசம்பர் 20), 33வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றன.

1959ஆம் ஆண்டு இந்த வட்டார விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியபோது அதை தாய்லாந்து ஏற்று நடத்தியது.

இப்போது 33வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளைத் தாய்லாந்து அதன் தலைநகர் பேங்காக்கிலும் சோன்புரியிலும் ஏற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளன.

அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள் முதல் பாரம்பரியமான உள்ளூர் விளையாட்டுகள் வரை 50 வெவ்வேறு வகையான விளையாட்டுகளில் மொத்தம் 13,657 விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர்.

தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், மியன்மார், வியட்னாம், லாவோஸ், புருணை, திமோர்-லெஸ்டே ஆகியவை போட்டிகளில் பங்கேற்ற பத்து நாடுகள்.

டிசம்பர் 10ஆம் தேதி அன்று, பாதுகாப்பு அக்கறைகள் காரணமாக, கம்போடியா 2025 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தனது அணியை விலக்கிக் கொண்டது.

பதக்கங்களை வழங்கிய முதல் விளையாட்டு பேட்மிண்டன் ஆகும். இதில் குழுப் போட்டிகளில் தோற்கடிக்கப்பட்ட அரையிறுதிப் போட்டியாளர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றனர்.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் பதக்கம் சிங்கப்பூருக்குக் கிடைத்தது. அதன் பெண்கள் அணி அந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றது.

தாய்லாந்தின் பேராதிக்கம்

33வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தாய்லாந்து 233 தங்கம், 154 வெள்ளி, 112 வெண்கலம் என மொத்தம் 499 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.

91 தங்கத்துடன் இந்தோனீசியா இரண்டாம் இடத்தையும், 87 தங்கத்துடன் வியட்னாம் மூன்றாம் இடத்தையும், 57 தங்கத்துடன் மலேசியா நான்காம் இடத்தையும் பெற்றன.

சிங்கப்பூர் அணி 52 தங்கம், 61 வெள்ளி, 89 வெண்கலம் என மொத்தம் 202 பதக்கங்களைப் பெற்று பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது.

இதர நாடுகளான பிலிப்பீன்ஸ் 50 தங்கம், மியன்மார் மூன்று தங்கம், லாவோஸ் இரண்டு தங்கம், புருணை ஒரு தங்கம் பெற்றிருந்தன.

பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள திமோர் லெஸ்டே ஒரு வெள்ளி, ஏழு வெண்கலப் பதக்கங்களை வென்றது.

சனிக்கிழமை (டிசம்பர் 20) அன்று மாலை பேங்காக்கின் ராஜமங்கள விளையாட்டரங்கில் 33வது தென்கிழக்காசிய விளையாட்டுகளின் நிறைவு விழா நடைபெற்றது.

தாய்லாந்தின் பயணத்துறை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆர்த்தகோர்ன் சிரிலத்தயாகோர்ன் முடிவுரை ஆற்றிய பின், தாய்லாந்தின் துணைப் பிரதமர் கேப்டன் தமனாட் பிரோம்போவ் 33வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை அதிகாரபூர்வமாக முடித்து வைத்தார்.

அதன் பின்னர், தென்கிழக்காசிய விளையாட்டுகள் சம்மேளனத்தின் அதிகாரபூர்வக் கொடி இறக்கப்பட்டது.

அந்தக் கொடியைத் தாய்லாந்து ஏற்பாட்டுக் குழுவினரிடமிருந்து பெற்று அதை உற்சாகத்துடன் அசைத்தார், 2027ஆம் ஆண்டு 34வது தென்கிழக்காசிய விளையாட்டுகளை ஏற்று நடத்தும் மலேசியாவின் இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் முகமது தவ்ஃபிக் ஜொஹாரி.

அதன் பிறகு, மலேசியாவின் பாரம்பரிய நடனங்களை மலேசியாவின் நடனமணிகள் அரங்கில் படைத்து முடித்ததுடன், வாணவேடிக்கையுடன் 33வது தென்கிழக்காசிய விளையாட்டுகள் இனிதே நிறைவுபெற்றன.

குறிப்புச் சொற்கள்