தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

38 ஆண்டு தேசிய சாதனையை முறியடித்த திருபன்

2 mins read
3b92e978-2d1b-4dee-a44a-a83245d15c13
800 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த சிங்கப்பூரர் திருபன் தனராஜன் (எண் 6). - படம்: சிங்கப்பூர் அத்லெட்டிக்ஸ்

ஆடவர்க்கான 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 30) புதிய தேசிய சாதனை படைத்தாலும், சிங்கப்பூரின் திருபன் தனராஜன் அதனுடன் மனநிறைவு அடைந்துவிடவில்லை.

இன்னும் பல சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்பதில் இவரது கவனம் திரும்பியிருக்கிறது.

தென்கொரியாவில் நடந்துவரும் ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றை 1 நிமிடம் 49.94 நொடிகளில் முடித்தார் திருபன். இதன்மூலம் கடந்த 1987ஆம் ஆண்டு சின்னதம்பி பாண்டியன் படைத்திருந்த 1 நிமிடம் 50.56 நொடி எனும் தேசிய சாதனையை அவர் விஞ்சினார்.

தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 28 பேரில் 17வதாக வந்த திருபனால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

அடுத்ததாக, தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி மேடையை அலங்கரிக்க வேண்டும் என்பதே இவரது இலக்கு.

தேசிய சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கடந்த ஓராண்டாகவே கடுமையான பயிற்சி மேற்கொண்டு வந்ததாகக் கூறினார் திருபன்.

“என் பயிற்றுநர்களுடன் அமர்ந்து திட்டம் வகுத்தேன். நாங்கள் திட்டமிட்டது என்னவோ, அது இன்று (மே 30) நடந்தது. இது வெறும் தொடக்கந்தான்,” என்றார் இவர்.

இறுதிச் சுற்றுக்கு முன்னேற இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற திருபன், அது ஒன்றும் எட்ட முடியாத இலக்கன்று என்றும் ஈராண்டுகளுக்குப்பின் நடக்கும் ஆசிய திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் அது சாத்தியமாகலாம் என்றும் சொன்னார்.

இடைப்பட்ட காலத்தில், வேறு சில இலக்குகளை இவர் வகுத்துள்ளார்.

“அடுத்ததாக, தேசிய சாதனை நேரத்தை 1:48 அல்லது 1:47 என இன்னும் குறைக்க வேண்டும். அதன்பின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஏதேனும் ஒரு பதக்கம் வெல்ல வேண்டும். தங்கம் வெல்ல முடியும் என நம்புகிறேன்,” என்றார் திருபன்.

குறிப்புச் சொற்கள்