இளையர்களின் விறுவிறுப்பான கபடிப் போட்டி: பாரம்பரிய விளையாட்டின் எழுச்சி

இளையர்களின் விறுவிறுப்பான கபடிப் போட்டி: பாரம்பரிய விளையாட்டின் எழுச்சி

2 mins read
9dabe086-e533-4cb9-8d14-0a5023838e42
போட்டியில் பங்கேற்ற கபடி வீரர்கள். - படம்: ஆயிஷா ரோஸ்

சிங்கப்பூர் கபடி சங்கத்தின் ஏற்பாட்டில், சனிக்கிழமை (மே 2) செங்காங் உயர்நிலைப் பள்ளியில் கபடிப் போட்டி ஒன்று நடைபெற்றது. சிங்கப்பூரின் பல உயர்நிலைப் பள்ளிகள் பங்கேற்ற அந்த ஒரு நாள் நிகழ்வு, மாணவர்களிடையே கபடி விளையாட்டு பெற்றுள்ள புதிய எழுச்சியைப் பறைசாற்றியது.

15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு, 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என மூன்று நிலைகளில் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டி காலை 7 மணிக்குத் தொடங்கியது.

விறுவிறுப்பாக விளையாடும் கபடி வீரர்கள்.
விறுவிறுப்பாக விளையாடும் கபடி வீரர்கள். - படம்: ஆயிஷா ரோஸ்

15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் ‘டிபிஎஸ்’ அனைத்துலகப் பள்ளி அபார வெற்றி பெற்றது. அதேவேளை, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி முதலிடத்தைப் பிடித்தது.

சிங்கப்பூர் கபடி சங்கத்தின் நிறுவனர் முஹம்மது சல்மான் நௌஃபல், 40, “சிங்கப்பூர் முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் கபடிப் போட்டி தற்போது ஒரு புதிய எழுச்சியைப் பெற்றுள்ளது. பல உயர்நிலைப் பள்ளிகளும் பல இன இளையர்களும் மாணவர்களும் முன்வந்து கபடிப் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கூறினார்.

பெண்கள் பிரிவில் வெற்றிபெற்ற ‘டிபிஎஸ்’ அனைத்துலகப் பள்ளியின் கபடிக் குழு உறுப்பினர் காவ்யா தினேஷ் குமார், 16, “புதிதாகப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி ஆச்சரியப்படவைக்கும் வகையில் விளையாடுகிறார்கள்,” எனக் கூறினார்.

“18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வென்ற புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளியின் கபடி அணித் தலைவர் கதிரேசன் சிவானந்து, 15, “கடுமையான போட்டிக்கு மத்தியிலும் எங்களது குழுவின் கூட்டு முயற்சியால் வெற்றிபெற்றோம்,” என்றார்.

புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளியின் கபடிக் குழுப் பயிற்சியாளரும் தமிழாசிரியருமான திரு எவின் ராஜசேகர், 42, தமது கபடிக் குழுவின் வெற்றியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

“தமிழ்மொழி எவ்வாறு பேசப்படாவிட்டால் அழிந்துவிடுமோ, அதேபோல நமது பாரம்பரிய விளையாட்டான கபடியையும் நாம் விளையாடாவிட்டால் அது அழிந்துவிடும். இதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது நமது கடமையாகும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளியின் கபடிக் குழு வெற்றியாளர்கள்.
புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளியின் கபடிக் குழு வெற்றியாளர்கள். - படம்: ஆயிஷா ரோஸ்

அந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, கபடி சங்கத்தின் 10 ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. அதில் கடந்த வருடங்களில் சிறப்பாக விளையாடிய 10 வீரர்களுக்கு அபிமன்யு விருதுகள் வழங்கப்பட்டன.

அவ்விழாவில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்ற கபடி வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்