கோலாலம்பூர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட், நட்புமுறைப் போட்டியில் தென்கிழக்காசிய சிறப்பு அணியிடம் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்றது.
தென்கிழக்காசிய சிறப்பு அணி, பல்வேறு தென்கிழக்காசிய வீரர்கள் ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்ட குழுவாகும்.
இந்த ஆட்டம் புதன்கிழமை (மே 28) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் விளையாட்டரங்கில் 72,550 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ஆட்டம் முடிந்த பிறகு ரசிகர்களின் இழிவொலிக்கு (boos) ஆளாயினர் யுனைடெட் வீரர்கள்.
சென்ற வாரம் நிறைவடைந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் யுனைடெட் பட்டியலில் 15வது இடத்தில் முடித்தது. அந்த லீக் பருவம், 51 ஆண்டுகளில் யுனைடெட் கண்டிராத ஆக மோசமானதாகும்.
ஆசிய நாடுகளுக்குச் சென்று நட்புமுறை ஆட்டங்களில் விளையாடிவருகிறது யுனைடெட். தென்கிழக்காசிய சிறப்பு அணிக்கு எதிரான ஆட்டம் அதன் முதல் ஆட்டமாகும்.
எனினும், தனது குழு இழிவொலிக்கு உள்ளானதை நினைத்து வருந்தவில்லை என்றார் யுனைடெட்டின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரூபன் அமோரிம்.
“ரசிகர்களிடமிருந்து வந்த இழிவொலி நமக்குத் தேவைதான்,” என்று அமோரிம் குறிப்பிட்டார்.
“அவர்கள் (ரசிகர்கள்) என்ன நடந்தாலும் மான்செஸ்டர் யுனைடெட் மீது நம்பிக்கையுடன் இருக்கின்றனர்,” என்றும் அவர் சுட்டினார்.