அதிக உயரத்திலிருந்து விழுந்த பந்தைப் பிடித்து கின்னஸ் சாதனை!

அதிக உயரத்திலிருந்து விழுந்த பந்தைப் பிடித்து கின்னஸ் சாதனை!

1 mins read
99cb8bd1-4ce8-4a1d-8b0f-b64220e3dce0
டென்னிஸ் பந்துடன் கேமரன் ஹைனிக். - படம்: கின்னஸ் உலக சாதனை

வாஷிங்டன்: அதிக உயரத்திலிருந்து விழுந்த டென்னிஸ் பந்தைப் பிடித்தவர் என்ற சாதனையைப் படைத்து, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் தன் பெயரை இடம்பெறச் செய்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது கேமரன் ஹைனிக்.

ஜூலியன் என்ற நண்பர் ஆளில்லா வானூர்தி மூலம் 143.11 மீட்டர் (469.5 அடி) உயரத்திலிருந்து பந்தை விழவைக்க, வெறுங்கையால் அதை நேர்த்தியாகப் பிடித்தார் கேமரன்.

“நான் நினைத்ததுபோல அவ்வளவு வலிக்கவில்லை. சிலர் வேகமாக ‘ஹை ஃபைவ்’ கொடுக்கும் அளவிற்குக்கூட வலிக்கவில்லை,” என்றார் கேமரன்.

பந்தைப் பிடிக்கும் கேமரன் ஹைனிக்.
பந்தைப் பிடிக்கும் கேமரன் ஹைனிக். - படம்: கின்னஸ் உலக சாதனை

இதற்காக கேமரனும் ஜூலியனும் கடந்த இரு கோடைக் காலங்களிலும் பயிற்சி எடுத்தனர்.

முதலாண்டில் பந்து எங்கு விழும் என்று கணிக்கவே முடியவில்லை என்றும் அதற்குப் பக்கத்தில்கூட செல்ல முடியவில்லை என்றும் கேமரன் சொன்னார்.

இதனால் ஊக்கமிழந்தாலும், முயற்சியைக் கைவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர்கள், அடுத்த ஆண்டிலும் பயிற்சியைத் தொடங்கினர்.

முன்னதாக, 120 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த டென்னிஸ் பந்தைப் பிடித்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்