முதன்முறையாக ஆசிய ஹாக்கி சம்மேளன (ஏஎச்எஃப்) கிண்ணத்தை வென்றுள்ளது சிங்கப்பூர் பெண்கள் அணி.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்ற இறுதியாட்டத்தில் சிங்கப்பூர், பெனால்டிகளில் தைவானை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது. ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்த பிறகு வெற்றியாளரைத் தீர்மானிக்க ஆட்டம் பெனால்டிகள் வரை சென்றது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஏஎச்எஃப் போட்டியின் இறுதியாட்டம் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்தது. இப்போட்டி, பெண்கள் ஆசிய கிண்ணப் போட்டிக்கான தகுதிச் சுற்றாகவும் விளங்குகிறது. ஏஎச்எஃப் கிண்ணத்தில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பெண்கள் ஆசிய கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறும்.
ஏஎச்எஃப் கிண்ணப் போட்டியின் ஆறு அணிகள் இடம்பெற்ற குழுவில் முதலிடத்தைப் பிடித்து சிங்கப்பூர் இறுதியாட்டத்துக்கு முன்னேறியிருந்தது. சிங்கப்பூரின் வெற்றிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அதன் வீராங்கனை டயானா ஓங் போட்டியின் ஆகச் சிறந்த விளையாட்டாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக 1997ஆம் ஆண்டு நடந்த முதல் ஏஎச்எஃப் போட்டியில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் முடித்தது. 2016ஆம் ஆண்டுப் போட்டியிலும் அதே இடத்தைப் பிடித்தது.

