வான்கூவர்: இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றுள்ளது ஆஸ்திரேலியா.
சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நடைபெற்ற டி பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, துருக்கியை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
விட்டுக்கொடுக்காமல் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட துருக்கியை கவனமான, துல்லியமான விளையாட்டால் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. அணியின் இரண்டு கோல்களுமே அபாரமானவை.
ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் நெஸ்டோரி இரான்குண்டா முதல் கோலைப் போட்டார். சமநிலை காணும் முயற்சியில் துருக்கி தீவிரமாக இறங்கிய வேளையில் 75வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார் கோனர் மெட்கால்ஃப்.
முந்தைய உலகக் கிண்ணப் போட்டிகளில் காணப்பட்டதுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவின் விளையாட்டு இம்முறை பெரிதும் மேம்பட்டிருந்தது.
ஸ்காட்லாந்துக்கும் வெற்றி
ஞாயிற்றுக்கிழமை முன்னதாக நடைபெற்ற சி பிரிவு ஆட்டத்தில் ஹைட்டியை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது ஸ்காட்லாந்து. ஜான் மெக்கின் ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டார்.
1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்காட்லாந்து முதன்முறையாக உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது. இந்த வெற்றி, 1990க்குப் பிறகு அணி உலகக் கிண்ணத்தில் வென்றிருக்கும் முதல் ஆட்டமாகும்.
உலகக் கிண்ண வரலாற்றில் முதன்முறையாக முதல் சுற்றைத் தாண்டும் இலக்கைக் கொண்டுள்ளது ஸ்காட்லாந்து.
தொடர்புடைய செய்திகள்
பிரேசிலை வெல்லவிடவில்லை மொரோக்கோ
சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை ஆறு மணிக்கு நடந்த மற்றொரு சி பிரிவு ஆட்டத்தில் பிரேசிலும் மொரோக்கோவும் 1-1 என சமநிலை கண்டன.
பிரேசிலிடம் பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உற்சாக விளையாட்டு இன்னும் வெளிவரவில்லை. எனினும், வினிசியஸ் ஜூனியர் அடித்த கோல் மிகச் சிறப்பாக இருந்தது.
தோற்காமல் தப்பித்தது கத்தார்
அந்த ஆட்டத்துக்கு முன்பு நடந்த பி பிரிவு ஆட்டத்தில் கத்தாரும் சுவிட்சர்லாந்தும் அதே கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டன. ஆட்டம் 90 நிமிடங்களையும் தாண்டிய பிறகு சுவிட்சர்லாந்தின் மிரோ முஹைம் சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் கத்தார் தோல்வியிலிருந்து தப்பியது.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை கோல்களுக்குப் பஞ்சமில்லாமல் இருந்துவருகிறது.

