உலகக் கிண்ணக் காற்பந்து: 28 ஆட்டங்களை இலவசமாக ஒளிபரப்புகிறது மீடியாகார்ப்

உலகக் கிண்ணக் காற்பந்து: 28 ஆட்டங்களை இலவசமாக ஒளிபரப்புகிறது மீடியாகார்ப்

2 mins read
6c475ca7-f619-4239-b381-b78b64296ba2
2024 அக்டோபர் 15ஆம் தேதி, பொலிவியா உடனான உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று ஆட்டத்தில் கோல் போட்டதைக் கொண்டாடும் அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளின் ஆட்டங்களையும் சிங்கப்பூர் ரசிகர்கள் ஒளிவழி 5, ‘மீவாட்ச்’ தளம் வழியாக இலவசமாகக் கண்டுகளிக்கலாம்.

ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ள இப்போட்டியில், இலவசமாக ஒளிபரப்பவுள்ள 28 ஆட்டங்களின் விவரங்களை மீடியாகார்ப் நிறுவனம் புதன்கிழமை (ஜூன் 3) வெளியிட்டது.

2026 உலகக் கிண்ணப் போட்டி, 2026 முதல் 2028 வரையிலான பிற ஃபிஃபா போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஊடக உரிமத்தைப் பெற்றிருப்பதாக மீடியாகார்ப் பிப்ரவரியில் அறிவித்திருந்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி, 2026 உலகக் கிண்ணப் போட்டியின் 104 ஆட்டங்களையும் அதன் அதிகாரபூர்வத் தொடக்க, நிறைவு விழாக்களையும் மீடியாகார்ப் ஒளிபரப்பும்.

அதோடு, 2027 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின் 64 ஆட்டங்கள் உட்பட 17 வயது மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர், மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளையும் அது ஒளிபரப்பவுள்ளது.

2022 உலகக் கிண்ணப் போட்டியின்போது ஒன்பது ஆட்டங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், இம்முறை அந்த எண்ணிக்கை 28 ஆட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 12 பிரிவுகளில் இருந்தும் தலா இரண்டு ஆட்டங்கள் ஒளிபரப்பாகும். இதன்படி, போட்டியில் பங்கேற்கும் 48 அணிகளும் விளையாடுவதைக் காணலாம். மேலும், இரண்டு அரையிறுதி ஆட்டங்கள், மூன்றாம் இடத்திற்கான ஆட்டம், இறுதியாட்டம் ஆகியவையும் இலவசமாக ஒளிபரப்பப்படும்.

உலகக் கிண்ணப் போட்டிகளின் அனைத்து ஆட்டங்களையும் பார்க்க விரும்புவோர், $118 கட்டணம் செலுத்தி அவற்றைக் கண்டுகளிக்கலாம். இதன்மூலம் 104 ஆட்டங்களையும் மீவாட்ச் தளத்திலும் சிங்டெல், ஸ்டார்ஹப் வழியாகவும் நேரலையாகப் பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்