உலகக் கிண்ணக் காற்பந்து: போராடி வென்ற போர்ச்சுகல்

உலகக் கிண்ணக் காற்பந்து: போராடி வென்ற போர்ச்சுகல்

2 mins read
கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை
91828ebe-c2d2-4aeb-9234-9ab1cfc4c6a5
உலகக் கிண்ண ‘நாக் அவுட்’ சுற்றுப் போட்டிகளில் கோலடித்த ஆக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்ற போர்ச்சுகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 41. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

டொரான்டோ: உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் விறுவிறுப்பான இரண்டாம் சுற்று ஆட்டங்களில் போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் வெற்றி பெற்று, 16 அணிகள் பங்கேற்கும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளன.

கனடாவின் டொரான்டோ விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் குரோவேஷியாவை வீழ்த்தியது.

ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் குரோவேஷியாவின் இவான் பெரிசிச் முதல் கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். எனினும், 68வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக மாற்றினார்.

இதன்மூலம் உலகக் கிண்ண ‘நாக்-அவுட்’ சுற்றில் கோல் அடித்த ஆக வயதான வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். 41 வயதான அவர் உலகக் கிண்ண ‘நாக் அவுட்’ சுற்றில் கோலடித்ததும் இதுவே முதன்முறை.

போர்ச்சுகல் அணியின் மாற்று வீரராகக் களம் புகுந்த கோன்சாலோ ராமோஸ், ஆட்டம் முடியும் தறுவாயில் தலையால் முட்டி கோலடித்து, தமது அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

அதன்பின் குரோவேஷியாவும் பந்தை வலைக்குள் தள்ளியது. ஆயினும், காணொளி உதவி நடுவர் தொழில்நுட்பம் மூலம் அது ‘ஆஃப்சைடு’ நிலையிலிருந்து அடிக்கப்பட்டது கண்டறியப்பட்டதால், போர்ச்சுக்கல் அணி தப்பியது.

ஸ்பெயின் ஆதிக்கம்

முன்னதாக, லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், வலிமையான ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் வீழ்த்தியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது.

மார்க் குக்குரெல்லா ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகளின்மூலம் 36 மற்றும் 89வது நிமிடத்தில் அருமையான இரு கோல்களை அடித்தார் மிக்கெல் ஒயர்சாபல். இடையில் 66வது நிமிடத்தில் பெட்ரோ போரோவும் தன் பங்கிற்கு ஒரு கோலடித்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஹாலிவுட் பிரபலங்களான பெனிலோப்பே குரூஸ், ஹேவியர் பர்தெம் உள்ளிட்டோர் நேரில் கண்டு ரசித்த அந்த ஆட்டத்தில் ஆஸ்திரிய அணியால் ஸ்பெயினின் தற்காப்பு அரணை உடைக்க முடியாமல் போனது.

இதன்மூலம் ஜூலை 7ஆம் தேதி நடக்கவிருக்கும் அடுத்த சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் - போர்ச்சுகல் அணிகள் நேருக்கு நேர் மோதுவது உறுதியாகியுள்ளது.

இன்னோர் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

குறிப்புச் சொற்கள்
போர்ச்சுகல்ஸ்பெயின்ஆஸ்திரியாஉலகக் கிண்ணம்காற்பந்து