இளையர் ஒலிம்பிக்: சிங்கப்பூர் வீராங்கனைக்குத் தங்கம்

இளையர் ஒலிம்பிக்: சிங்கப்பூர் வீராங்கனைக்குத் தங்கம்

படம்: எஸ்ஜிஒலிம்பிக்ஸ்/ இன்ஸ்டகிராம்

04 Nov 2026 - 6:37 pm

1 mins read

டக்கார்: செனகல் நாட்டில் நடைபெறும் 2026 இளையர் ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரின் வுஷு வீராங்கனை இங் ஸீ நின், தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் இந்தமுறைதான் வுஷு சேர்க்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான டாய்ஜிகுவான் ஒருங்கிணைந்த பிரிவில் இங் மொத்தம் 18.713 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

டாய்ஜிஷான் சுற்றில் 9.353 புள்ளிகளும், டாய்ஜிகுவான் சுற்றில் 9.360 புள்ளிகளும் பெற்று அவர் தங்கம் வென்றார்.

“எனது கடின உழைப்பு பலனளித்தது மிகுந்த நிம்மதி அளிக்கிறது. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி,” என 16 வயதான இங் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அமைச்சர் டேவிட் நியோ இங்கின் ஈடற்ற சாதனையைக் குறிப்பிட்டு இன்ஸ்டகிராமில் பாராட்டுத் தெரிவித்தார்.

பத்து வயதில் வுஷு பயிற்சியைத் தொடங்கிய இங், 2024 உலக இளையர் சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றார்.

இந்த ஆண்டு சீனாவின் தியான்ஜினில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி வென்றார். ஒலிம்பிக்கிற்காகப் பயிற்சி நிலையத்தில் தங்கித் தீவிரப் பயிற்சியும் அவர் மேற்கொண்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு கோடைக்கால இளையர் ஒலிம்பிக்கில் சிங்கப்பூரின் முதல் தங்கம் இதுவாகும். அப்போது பாய்மரப் படகோட்டத்தில் சமந்தா யோம், பெர்னி சின் தங்கம் வென்றனர்.

குறிப்புச் சொற்கள்