சென்னை: தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 1.47 கோடி பேர் பயன் பெற்று வருவதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகம் பேர் பயன்பெறும் வகையில் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து 1.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் வரவுசெலவு அறிக்கை மீதான விவாத்தின்போது குறிப்பிட்டார்.
“அதேபோல், காப்பீட்டு தொகை வரம்பும் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சிகிச்சை முறைகளும் 1,450லிருந்து 2,050 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
“இத்திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை 970லிருந்து 2,175ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
முன்னதாக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தனது கூடலூர் தொகுதி மக்கள் சிரமப்படுவதாகவும் அதிமுக உறுப்பினர் பொன்ஜெயசீலன் பேரவையில் தெரிவித்தார்.
அம்மக்களுக்கு காப்பீட்டுப் பலன்கள் விரைந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேற்குறிப்பிட்ட சில தரவுகளைப் பகிர்ந்துகொண்டார்.