நாமக்கல்: ஈரான் போரினால் நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. சேமிப்புக் கிடங்குகளில் முட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்திலுள்ள 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் ஆறு கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாள்தோறும் ஐந்து கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதுடன், துபாய், குவைத், கத்தார், ஓமான், பஹ்ரேன், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மத்திய கிழக்கில் நடைபெறும் சண்டையில் அவ்வட்டாரத்திற்கான முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
“ஈரானின் ஜெபல் அலி துறைமுகத்தில் வணிகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அங்கு கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. விமானம் மூலம் முட்டைகளை அனுப்ப 2,000 டாலராக இருந்த கட்டணம் 6,000 டாலர் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் உள்ள கிடங்குகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி முட்டைகள் வரை தேங்கியுள்ளன,” என்று நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் எஸ்.கேசவன் கூறினார்.
“ரமலான் மாதம் என்பதால் வளைகுடா நாடுகளில் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. போர் நடைபெறுவதால் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ‘கிடுகிடு’வென ஏற்றம் கண்டு வந்தது. தற்போது ஏற்றுமதி தடைபட்டிருப்பதால் முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

