சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) கையெழுத்தானது.
அன்று இரவு ஏறக்குறைய 7.15 மணியளவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.சுதீஷ் எம்பி, விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தனர். அப்போது தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை திமுகவிடம் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
“விரைவில் எங்களுக்கான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம். 27ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 1ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்வோம்.
“மொத்தமாக 25 தொகுதிகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. நாங்கள் கடைசியாக திமுக கூட்டணிக்கு வந்தோம், அதனால்தான் தாமதமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. நாங்களும் தொகுதிகளை விட்டுக்கொடுத்து இருக்கிறோம்,” என்றார் பிரேமலதா.

