சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து ஏறக்குறைய 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் எனப் போக்குவரத்துத்துறை எதிர்பார்க்கிறது.
எனவே, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சுமார் 7,800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
கடந்த ஆண்டு அரசுப்பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து ஐந்து லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்ற நிலையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது சற்றே ஏறக்குறைய 5.8 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் எனப் போக்குவரத்துக்கழகம் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, சிறப்பு ரயில்கள் மூலம் 3 லட்சம் பேரும் சொந்த வாகனங்கள், சொகுசுப் பேருந்துகள் மூலம் 1.5 லட்சம் பேரும் சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடும் எனத்தெரிகிறது.
பெரும்பாலானோர் 28, 29ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் எனக் காவல்துறையினர் கணித்துள்ளனர்.
எனவே, ஒரே சமயத்தில் பயணம் செய்யாமல் இருந்தால் போக்குவரத்து நெரிசலில் பலமணி நேரம் சிக்கித்தவிப்பதைத் தவிர்க்கலாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னையில் இருந்து வழக்கமாகச் செல்லும் விரைவு ரயில்களோடு, 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.