தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய கல்வித்திட்டம் வேண்டாம்: ஸ்டாலின்

2 mins read
acaefbde-b472-46ef-a291-6358c6ce814e
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

விருத்தாச்சலம்: மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் தாம் கையெழுத்திட வாய்ப்பில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தேசியக் கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் வைக்கப்படும் வேட்டு என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றும் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க இயலாது என்றும் ஆளும் திமுக உறுதிபடத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை, இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சி என்றும் தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில் கடலூரில் பேசிய திரு ஸ்டாலின், தாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் இந்தி மொழி கற்பதை தமிழ்நாடு ஒரு போதும் தடுத்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.

“எங்கள் மொழியை அழிக்க நினைத்தால், ஆதிக்கம் செலுத்த நினைத்தால் விடமாட்டோம். தமிழன் என்றோர் இனம் உண்டு, அவர்களுக்கு ஓர் குணம் உண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

மொழி திணிப்பிற்கு எதிராக கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் போராடி வருகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் சமஸ்கிருதத்திற்கு ரூ.1,488 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.74 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிப் பாடத்திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக உள்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும், இது இந்தித் திணிப்பு முயற்சி என்று சாடியுள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் மும்மொழி பாடத்திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதையடுத்து, இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்