சென்னை: தமிழகத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான நிலத்தேவை வரம்பைக் குறைக்கும் சட்டத்திருத்த மசோதா உட்பட பத்து முக்கியமான மசோதாக்கள் தமிழகச் சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றப்பட்டன.
உயர் கல்வித்துறை அமைச்சர் தாக்கல் செய்த இந்த மசோதாவின்படி, தனியார் பல்கலைக்கழகம் தொடங்க இதுவரை கட்டாயமாக இருந்த 100 ஏக்கர் நிலத்தேவை தற்போது கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நிலப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட இந்த மாற்றத்தின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குறைந்தபட்சம் 12 ஏக்கரும் பிற மாநகராட்சிகள், நகராட்சிகளில் 18 ஏக்கரும் இதர பகுதிகளில் 25 ஏக்கர் நிலமும் இருந்தால் போதுமானது எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான நிலையான அறக்கட்டளை நிதியைக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய தளர்வுகள் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சிவ்நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் சேர்த்து, நகர்ப்புற உள்ளாட்சிப் பணியாளர்களைத் தமிழக அரசுத் தேர்வாணையம் வாயிலாக நியமித்தல் உள்ளிட்ட ஒன்பது பிற மசோதாக்களும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.

