சென்னை: கால்நடை விவசாயிகள், கால்நடை வளர்ப்பு குறித்த பல்வேறு நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளும் முறையில் நூறு விவசாயிகள் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விழிப்புணர்வுப் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என கால்நடை பராமரிப்பு, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அமைச்சர், வெளிநாட்டுப் பயணம் விவசாயிகளுக்குப் பல வகையிலும் பயனுள்ளதாக அமையும் என்றார்.
ஆண்டுதோறும் நூறு விவசாயிகள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றார் அவர்.
கல்வியிலும் பல்வேறு திறன்போட்டிகளிலும் வெற்றிபெறும் அரசுக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை தமிழக அரசு ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது.
மேலும், தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் ரூ.20 கோடியில் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தெருநாய்க்கடிக்கு ஆளாகிறார்கள். இதைக் கவனத்தில் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு மேற்குறிப்பிட்ட திட்டத்தை அறிவித்துள்ளது.


