சென்னை: இன்று முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபட 10,000 பேர் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 65,000 தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரான அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
வடகிழக்கும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு மழைநீர் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உணவு, பால் மாவு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் இம்முறை அப்பகுதியில் உள்ள பேரிடர் மீட்பு மையங்களில் முன்கூட்டியே அப்பொருள்களை இருப்பு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நீர்நிலைகள் தொடர்ச்சியாக கண்காணிப்பில் உள்ளன. நீர்நிலைகளுக்கு வரும் உபரி நீரை பாதுகாப்பாக அப்படியே வெளியேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் 10 சென்டி மீட்டர் அளவுக்கு குறையாமல் மழை பெய்யும் என்றும் சில இடங்களில், 20 சென்டி மீட்டர் மழை பதிவாகக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீட்புப்பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
பருவமழை முன்னெச்சரிகை பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும், பல்வேறு துறைகளில் உள்ள நிதிகளைப் பயன்படுத்தியே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
தேவைப்படும் பட்சத்தில் தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் மீட்புப் பணிகளில் ஈடுபட 10,000 பேர் தயார் நிலையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் மீட்புப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளத் தயார் நிலையில் உள்ளனர் என்றார் அமைச்சர்.