சென்னை: தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் புற்றுநோயால் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நூறாயிரத்தைக் கடந்துவிட்டது.
இந்தப் பாதிப்பு குறித்த தரவுகளை மத்திய சுகாதார, குடும்பநல அமைச்சு நாடாளுமன்றத்தில் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 100,097 பேருக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தமிழகத்தில் புற்றுநோய்ப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு 68,750, 2021ல் 76,968, 2022ல் 89,265, 2023ல் 92,816, 2024ல் 96,486 என அதிகரித்து வந்த புது நோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது ஒரு லட்சத்தைக் கடந்துவிட்டது.
பரவலான பரிசோதனைத் திட்டங்கள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஆகியவற்றைச் செயல்படுத்தாவிட்டால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கையில் சென்னை மாநகரம் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு புதிதாக 8,506 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் 7,295, வேலூரில் 6,525 நோய் பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு புதிதாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 53,542 பேர் பெண்கள், 46,555 பேர் ஆண்கள் என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆண்கள் வாய்ப் புற்றுநோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு, புகையிலை நுகர்வு முக்கியமான காரணியாக உள்ளது. மேலும் பெருங்குடல், வயிறு சார்ந்த புற்றுநோய்கள் பலரைப் பாதித்துள்ளன.
பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அதற்கு அடுத்தபடியாக கருப்பைவாய், கருப்பைப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு 10,821 பெண்கள் கருப்பை, மார்பக, கருப்பைவாய்ப் புற்றுநோய்கள் காரணமாக மாண்டுவிட்டனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

