சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பரபரப்பு நிலவியது.
சென்னைக்கு வரும் 11 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை, மும்பை, பெங்களூர், டெல்லி, கோல்கத்தா, சிலிகுரி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வந்த எட்டு ஏர் இந்தியா விமானங்கள், ஹைதராபாத், கோவா, புனே ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை வந்த மூன்று இண்டிகோ விமானங்கள் என மொத்தம் 11 விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் உடனடியாக உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மோப்ப நாய்களுடன் விமானங்களுக்குள் சென்று சோதனை நடத்த தயார்நிலையில் காத்திருந்தனர்.
குறிப்பிட்ட 11 விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தரையிறங்கியதும் அதிகாரிகளும் நிபுணர்களும் விமானங்களுக்குள் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

