சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு தமிழ்நாட்டுக்கு ரூ. 11 லட்சம் கோடி உதவிகளை வழங்கியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை மதுராந்தகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் நிறைவாக பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.
கூட்டத்தில் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு எவ்வளவு வேகமாக வளர்கிறதோ, அவ்வளவு வேகமாக இந்தியாவும் வளரும். 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக காங்கிரஸ் - திமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டுக்கு மிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டு இருந்தது. கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள் நலனுக்காக ஒன்றிய அரசு ரூ.11 லட்சம் கோடி அளித்திருக்கிறது.
என்டிஏ அரசு அதிகாரப் பகிர்வு வாயிலாக மட்டும் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடி நிதியை அளித்துள்ளது. காங்கிரஸ் - திமுக மத்தியில் ஆட்சி செய்த காலத்தோடு ஒப்பிடுகையில், இது கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமானது.
என்டிஏ ஆட்சியில்தான் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ஏழு மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 80 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. வந்தே பாரத் ரயில் போன்ற நவீன விரைவு ரயில்கள் இந்தியாவில் தயாரித்ததை இந்த அரசு இயக்கி வருகிறது என்று மோடி குறிப்பிட்டார்.
விவசாயம், மீன் வளத்துறையில் இந்தியா சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் மூலம் இப்போது வரை விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கும் விவசாயக் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. அதை உலக சந்தைக்குக் கொண்டு சேர்க்க கடும் முயற்சியை பாஜக அரசு செய்து வருகிறது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ் நாட்டில் ‘இரட்டை என்ஜின்’
தமிழ்நாட்டில் ‘இரட்டை என்ஜின்’ அரசு அமைந்தால் பெரிய அளவில் முதலீடுகள் குவியும். குற்றங்களைத் தடுப்பதில் ஜெயலலிதாவின் ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டது. என்டிஏ ஆட்சியை மக்கள் அமைத்துத் தந்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
காங்கிரஸ் - திமுக அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. என்டிஏ அரசு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியது. மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு மாநில வளர்ச்சிக்கு வித்திடும் அரசு தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்றார் மோடி.
அதிமுக அதிர்ச்சி
அதிமுக என குறிப்பிடாமல் பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என பிரதமர் மோடி பேசினார். தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பேசிய நிலையில் அதிமுக பெயரையே குறிப்பிடாமல் பாஜக-என்டிஏ கூட்டணி ஆட்சி என மோடி பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

