தீபாவளிக்கு 1,100 தற்காலிக மதுக்கடைகளைத் திறப்பதற்கு சீமான் கண்டனம்

தீபாவளிக்கு 1,100 தற்காலிக மதுக்கடைகளைத் திறப்பதற்கு சீமான் கண்டனம்

1 mins read
1d50ef95-2786-43a3-a759-11b1587ee327
சீமான். - படம்: ஊடகம்

ஈரோடு: தீபாவளிப் பண்டிகையின்போது தமிழகம் முழுவதும் கூடுதலாக 1,100 தற்காலிக மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணியும் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து மாநில ஆளுநர்கள் விரைவில் மாற்றப்பட இருப்பதாகக் குறிப்பிட்டார்.

“இதையறிந்து தங்கள் போராட்டத்தால்தான் ஆளுநரை மத்திய அரசு மாற்றிவிட்டதாக திமுகவினர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதனால்தான் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றனர்,” என்றார் சீமான்.

தமிழகத்தில் 1,100 தற்காலிக மதுக்கடைகள் திறக்கப்படுவதை மறைப்பதற்காகவே புதுப்புது பிரச்சினைகளைத் திமுக தரப்பு கிளப்பி வருவதாகவும் அவர் சாடினார்.

“கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது தமிழகத்தின் நாகரிகம் என்பதுதான் சரி. ஆனால், திராவிட நாகரிகம் என்று சொல்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும்,” என்றார் சீமான்.

குறிப்புச் சொற்கள்