தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்னிலக்க நூலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள்; 12 கோடி பேர் பார்வை

2 mins read
b439d987-c8fa-4bc6-b196-e373e91f3b7e
மின்னிலக்க நூலகமானது சங்க இலக்கியங்கள், தமிழ்க் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், தமிழ் இலக்கண நூல்கள், அகராதிகள், சொற்களஞ்சியங்கள், வரலாற்று ஆவணங்கள் ஆகியவற்றை உலக அளவில் அனைவரும் எளிதில் அணுக வழிவகை செய்கிறது. - படம்: ஊடகம்

சென்னை: தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய அங்கமாக இயங்கிவரும் தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கி உள்ள மின்னிலக்க நூலகத்தை இதுவரை 12 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியை மின்னிலக்க உருமாற்றத்துக்குத் தடையின்றி தயார்செய்ய ஏதுவாக இந்த நூலகம் உருவாக்கப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மின்னிலக்க நூலகமானது சங்க இலக்கியங்கள், தமிழ்க் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், தமிழ் இலக்கண நூல்கள், அகராதிகள், சொற்களஞ்சியங்கள், வரலாற்று ஆவணங்கள் ஆகியவற்றை உலக அளவில் அனைவரும் எளிதில் அணுக வழிவகை செய்வதாக அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் இந்த முன்னெடுப்பின் மூலம் ஒரு லட்சம் அரிய புத்தகங்களும் எட்டு லட்சம் ஓலைச்சுவடிகளும் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என இதுவரை 12 கோடி பேர் அவற்றைப் பார்வையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“இந்த எண்ணிக்கையில் 45,045 புத்தகங்களை 31.52 லட்சம் பேரும் 31,258 பருவ வெளியீடுகளை 2.49 லட்சம் பேரும் 3,739 ஓலைச்சுவடிகளை 1.99 லட்சம் பேரும் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

“மேலும், 6,974 புகைப்படங்கள், 800 மணிநேர ஒலி-ஒளி ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மின்னூலகத்தை பயன்படுத்தும் வகையில் இ-பப், டெய்ஸி வடிவங்களில் (ஒலிப்புத்தகம்) கிடைக்க செய்வதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன,” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னையில் இயங்கி வரும் கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின் உதவியோடு, இந்த மின்னிலக்க நூலகம் உருவாக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்