சென்னை: சென்னையில் இருந்து புவனேஸ்வர், கோல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் 6 விமானங்களும் அந்த நகரங்களில் இருந்து சென்னை வரும் 6 விமானங்களுமாக மொத்தம் 12 விமானச் சேவைகள் புதன்கிழமை நிறுத்தப்பட்டன.
நிறுத்தப்பட்ட அந்த விமானங்கள் அனைத்தும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்தவை என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பொதுவாக மோசமான பருவநிலை, கனமழை காரணமாகவே விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்படும். ஆனால், இந்த முறை இத்தனை விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டதற்கு நிர்வாகக் காரணங்கள் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பாதிக்கப்பட்ட பயணிகள், தங்களுக்கு முன்கூட்டியே சரியான முறையில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. கடைசி நேரத்தில்தான் விமானச் சேவை நிறுத்தப்பட்டது என்றனர்.
குறிப்பாக அவசர பணிகள் தொடர்பாகப் பயணம் மேற்கொள்ள இருந்தவர்களே பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகப் பயணிகள் தெரிவித்தனர்.
இனிமேலாவது சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் முறையான திட்டமிடலைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் வாடிக்கையாளர்கள் விமான நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கெடுக்கும் வகையில் அல்லாமல் அவர்களைச் சரியான நேரத்தில் முன்கூட்டியே தொடர்புகொண்டு விமானச் சேவை தாமதம் அல்லது நிறுத்தப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் அந்தப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.