தப்பியோடிய 13 கைதிகள் கைது; மேலும் நால்வருக்கு வலைவீச்சு

தப்பியோடிய 13 கைதிகள் கைது; மேலும் நால்வருக்கு வலைவீச்சு

படம்: என்டிடிவி

28 Oct 2026 - 7:05 pm

2 mins read

தேனி: போலி வலிப்பு நாடகமாடி, தேனி மாவட்டம், தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து தப்பிச்சென்ற 17 விசாரணைக் கைதிகளில் 13 பேரை காவல்துறை சிறப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்தனர்.

அடர்ந்த வனப்பகுதியில் ஆளில்லா வானூர்தி கேமராக்கள் மூலம் நடத்தப்பட்ட வான்வழிக் கண்காணிப்பு அதிவேகக் கைது நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தது.

சினிமா பாணியில் அரங்கேறிய தப்பியோட்டம்

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளம் கைதிகள் சிலர், கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 26) தங்களில் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதுபோல் நள்ளிரவில் நாடகமாடினர். இதனால் பதறிப்போன ஒரு காவலர், கதவைத் திறந்தபோது அவரைத் தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல தீவிர குற்ற வழக்குகளில் தொடர்புடைய 19 முதல் 26 வயதுக்குட்பட்ட 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறையிலிருந்து தப்பியோடினர்.

அதையடுத்து, காவல்துறை இணை ஆணையர் தலைமையில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்ட எல்லைப் பகுதிகள் உடனடியாக அடைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கியது.

அடர்ந்த மலை, வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளைப் முற்றுகையிட்ட காவல்துறையினர், வெப்ப உணர் திறன் கொண்ட மூன்று சிறப்பு ஆளில்லா வானூர்திகளை வான்வெளியில் பறக்கவிட்டுத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

காட்டுக்குள் மறைந்திருந்த கைதிகள் வானூர்திகளின் சத்தத்தைக் கேட்டு ஓடத் தொடங்கிய காட்சிகள் வான்வழியாகப் பதிவாகின. அந்தத் தகவலின் அடிப்படையில் சரியான இலக்கை நோக்கிச் சென்ற அதிரடிப் படையினர், செவ்வாய்க்கிழமை இரவுக்குள் 13 கைதிகளைத் துரத்திப் பிடித்தனர்.

மீதமுள்ள நான்கு கைதிகளையும் சுட்டுப்பிடிக்குமாறு காவல்துறை தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்