தமிழகத் தேர்தலுக்கு ரூ.1,302 கோடி ஒதுக்கீடு: அர்ச்சனா பட்நாயக்

தமிழகத் தேர்தலுக்கு ரூ.1,302 கோடி ஒதுக்கீடு: அர்ச்சனா பட்நாயக்

2 mins read
5ec291ce-29dd-49d4-97d4-60a5c440fa3d
அர்ச்சனா பட்நாயக். - படம்: புதிய தலைமுறை

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக ரூ.1,302 கோடி தேர்தல் ஆணையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து திருவாட்டி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தல் செலவினங்கள், பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தேர்தல் நிதி உயர்வு

தமிழகத்தில் இந்த 2026 தேர்தலை நடத்துவதற்காக ரூ.1,302 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தல்களைவிட அதிகமாகும்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ.795 கோடியும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ரூ.1,009 கோடியும் செலவிட வழங்கப்பட்டது.

பதற்றமான இடங்கள்

தமிழகம் முழுவதும் 5,938 வாக்குச்சாவடிகள் ‘மிகவும் பதற்றமானவை’ என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இங்குக் கூடுதல் துணை ராணுவப் படையினர், நுண் பார்வையாளர்கள், சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

தேர்தல் சமயத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், வாக்காளர்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள், குடிநீர் வசதிகள் செய்து தருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக வரும் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் துணை ராணுவப் படையினர் தமிழகம் வர உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபிறகு இதுவரை ரூ.462 கோடி மதிப்பிலான ரொக்கமும் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் முறையான ஆவணங்கள் காட்டியவர்களிடம் ரூ.279 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.182 கோடி அமலாக்கத்துறை வசம் உள்ளது என்று திருவாட்டி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்