சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இடி மின்னல் தாக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பருவமழை பாதிப்புகள் குறித்து அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.
மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் 62 இடங்களில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக உடனடியாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டதாகவும் திரு செங்கோட்டையன் கூறினார்.
பருவமழையால் இடி, மின்னல் தாக்கி தற்போது வரை 14 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் ஒரு நாளேட்டில் 35 பேர் உயிரிழந்ததாக வந்த செய்தி தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.
“நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை ஏறக்குறைய 35,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. மழை முழுமையாக நின்ற பிறகே மாநிலம் தழுவிய அளவில் பயிர்ச்சேதங்கள், கால்நடை இழப்புகள் குறித்த முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படும்.
“மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவற்றை மக்கள் பாதுகாப்பான இடங்களில் பராமரிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது,” என்றார் செங்கோட்டையன்.
