90 அணைகளில் 141 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு

90 அணைகளில் 141 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு

2 mins read
a39cd225-c604-40cf-ab0c-283e7e65fe2d
தமிழக அணைகளில் இருந்து பாசனம், குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாள்களில் மட்டும் தமிழகத்தில் இயல்பைவிட 6 சென்டிமீட்டர் அளவு அதிக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான மழையும் பிற மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 141 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கையிருப்பு உள்ளதாக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அடுத்த மழையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

“தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டிஎம்சி ஆகும். இதில் மேட்டூர், பவானிசாகர், முல்லைப்பெரியாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டிஎம்சி,” என நீர்வளத்துறை கூறியுள்ளது.

இந்த அணைகள் பல்வேறு மாவட்டங்களின் பாசனம், குடிநீர்த் தேவையை மட்டுமன்றி, தொழிற்சாலைகளின் நீர்த் தேவையையும் பூர்த்தி செய்வதாகவும் தற்போது குறைவான அளவில் மட்டுமே நீர் கையிருப்பில் உள்ளதால் அனைத்துவித தேவைகளையும் ஈடுகட்டுவது சிரமம் என்றும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதியன்று வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது.

வழக்கமாக, அக்டோபர் 1 முதல் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் 9.5 சென்டிமீட்டர் என்பதே இயல்பான மழைப்பொழிவாகும். ஆனால், இம்முறை 15.6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது வழக்கத்தைவிட 65 விழுக்காடு அதிகம். இது நீர்வளத் துறைக்கு ஓரளவு நிம்மதி அளித்துள்ளது.

மேட்டூர் அணையில் 60.8 டிஎம்சி, ஈரோடு பவானிசாகரில் 21, கோவை பரம்பிக்குளத்தில் 13.1, சோலையாறு அணையில் 5.03 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பல அணைகளில் இருந்தும் பாசனம், குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் மழை பெய்யும் பட்சத்தில், அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து, அவை விரைவில் நிரம்பும் வாய்ப்புள்ளது என நீர்வளத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்