சென்னை: தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதாக தமிழக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில், 145 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளதாகவும் இதன்மூலம் 800 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாகவும் மேம்பட்ட நிலையிலும் உள்ளதாகத் தெரிவித்த அவர், அதன் காரணமாகவே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது என்றார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் தமிழகத்தில் 268 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தானமாகப் பெற்ற கல்லீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் மூலம் 1,500 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
இதேபோல் கடந்தாண்டில் மட்டும் 266 பேரின் உடல் உறுப்புகள் மூலம் 1,476 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
“நடப்பாண்டிலும்கூட ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
“39 பேரின் இதயம், 41 பேரின் நுரையீரல்கள், 263 சிறுநீரகங்கள், 118 கல்லீரல்கள் கிடைத்ததன் மூலம் 800 பேர் புது வாழ்வு பெற்றுள்ளனர்,” என்றார் திரு கோபாலகிருஷ்ணன்.
மேலும், கடந்த, 2008ஆம் ஆண்டில் இருந்து, 2,466 கொடையாளர்களிடம் இருந்து, 14,395 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன என்றும் நூற்றுக்கணக்கானோர் பலனடைந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

