கடலூர்: திருடனுக்குப் பயந்து அரிசி மூட்டையில் மறைத்து வைத்த பணம் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், வடலூரில் சண்முகா அரிசி மண்டி உள்ளது. அந்தக் கடையின் உரிமையாளர் சண்முகம். இவர் கடையில் வசூலான ரூ.15 லட்சம் பணத்தை திருடனுக்குப் பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.10 லட்சத்தை ஒரு பையிலும் ரூ.5 லட்சத்தை மற்றொரு பையிலும் போட்டு மறைத்து வைத்து மற்ற அரிசி மூட்டைகளுடன் சேர்த்து வைத்துள்ளார்.
மறுநாள் காலையில் சண்முகத்தின் உறவினர் கடையில் இருந்தபோது வாடிக்கையாளர் ஒருவர் வந்து அரிசி கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.15 லட்சம் மறைத்து வைத்திருந்த அரிசி மூட்டையை எடுத்து விற்பனை செய்துள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு கடைக்கு வந்த சண்முகம் அந்த அரிசி மூட்டை இல்லாததைக் கண்டு திடுக்கிட்டார்.
இதுகுறித்து விசாரித்தபோது, விபரம் தெரிய வந்திருக்கிறது. உடனே வாடிக்கையாளரைத் தேடிச் சென்று விசாரித்தபோது அந்த மூட்டைக்குள் ரூ.10 லட்சம்தான் இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்து ரூ.5 லட்சத்தை மீட்டுத் தர வேண்டும் என்று சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘கொசுவுக்குப் பயந்து வீட்டைக்கொளுத்தியதுபோல் ஆகிவிட்டது சண்முகத்தின் கதை, என்று ஊரார் பேசி வருகின்றனர்.