தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய மோசடியால் தமிழகத்தில் மட்டும் ரூ.1,600 கோடி இழப்பு: சைலேந்திர பாபு

2 mins read
65ad3433-fc7e-4242-b0ef-6c4daae11633
இணைய மோசடிகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணா்வுப் பேரணியைத் தமிழக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு கொடியசைத்து தொடங்கிவைத்தார். - படம்: சென்னைக் காவல்துறை / ‘எக்ஸ்’ தளம்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 1,600 கோடி ரூபாய் பணத்தை இணைய மோசடிக்காரர்களிடம் பொதுமக்கள் இழந்துள்ளதாக தமிழக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்தாா்.

சென்னை பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இணைய மோசடிகளைத் தடுப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

சென்னை பெருநகரக் காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவும் போரூா் ஸ்ரீராமச்சந்திரா உயா்கல்வி ஆராய்ச்சி நிறுவனக் கல்லூரியும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின.

இதில் சிறப்பு விருந்தினராகத் திரு சைலேந்திர பாபு கலந்துகொண்டு, விழிப்புணா்வுப் பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

“இந்தியாவில் தற்போது பெரிய குற்றங்களில் ஒன்றாக இணையக் குற்றங்கள் உருவெடுத்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் இணைய மோசடிக்காரர்களால் தமிழகத்தில் மட்டும் 117,000 போ் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் மோசடிக்காரர்களிடம் ரூ.1,600 கோடியை இழந்துள்ளனர்,” எனப் பேரணிக்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திரு சைலேந்திர பாபு கூறினார்.

தேசிய அளவில் ரூ.15,000 கோடி வரையும் கா்நாடகாவில் ரூ.1,800 கோடியும் பொதுமக்கள் இழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாகவும் வடஇந்தியாவில் மதுரா, ஜாா்க்கண்ட் உள்ளிட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்ப மையங்கள்போல, நிறுவனங்கள் அமைத்து மோசடிக் கும்பல்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“இதற்கு ஒரே தீா்வு தெரியாத நபா்களிடம் இருந்துவரும் அழைப்பை எடுக்காமல் இருப்பதுதான். சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இணையக் குற்றங்களுக்குக் குறைந்தது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே இந்தக் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும்,” என்றார் அவர்.

“இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் மாநிலம் தமிழகம்தான். எனவே, தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்தான் அதிக விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். உலகத்திலேயே இணையக் குற்றவாளிகளின் தலைநகரமாக கம்போடியா விளங்குகிறது,” என அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்