தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: தீவிர தேடுதல் வேட்டை

தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: தீவிர தேடுதல் வேட்டை

1 of 2
படம்: இந்து தமிழ் திசை
படம்: பிபிசி

27 Oct 2026 - 5:50 pm

2 mins read

தேனி: தேனி மாவட்டம் தேக்கம்பட்டி அருகே அமைந்துள்ள மாவட்டக் கிளைச் சிறையில் இருந்து நள்ளிரவில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அச்சிறை வளாகத்தில் மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளன. இந்நிலையில், திங்கட்கிழமை (அக்டோபர் 26) நள்ளிரவு மூன்றாவது பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மதன்மோகன் அங்குள்ள கதவைத் திறந்தார்.

அப்போது, அங்குத் தயாராக இருந்த லிங்கபிரசாந்த் (25), ராஜா சிக்கந்தர் (24), கருப்பசாமி (25), சிலம்பரசன் (24), திருப்பதி (23), சபரிநாதன் (24) உள்ளிட்ட 17 கைதிகள் ஒரே நேரத்தில் பாய்ந்து உதவி ஆய்வாளர் மதன்மோகனைத் தாக்கி நிலைகுலையச் செய்தனர். பின்னர், வெளிக்கதவு அருகே பாதுகாப்புக்கு நின்ற காவலர் தங்கபாண்டியையும் தாக்கிவிட்டுச் சிறை வளாகத்தை விட்டுத் தப்பியோடினர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளரும் காவலரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதும், தென்மண்டலச் சிறைத்துறைத் தலைவர் ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர ஆய்வு மேற்கொண்டார்.

தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறையைச் சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதிகள் தீவிரக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தேனி மாவட்டம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையும் தேடுதல் வேட்டையும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதனிடையே, தப்பிய கைதிகளில் பிரவீன் (27) என்பவர் மீண்டும் அதிகாரிகள் முன் சரணடைந்துள்ள நிலையில், மேலும் நான்கு கைதிகள் பிடிபட்டனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள எஞ்சிய 12 கைதிகளைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்