தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

176 ஆண்டு பழமையான தாவரவியல் பூங்கா ரூ.3 கோடி மதிப்பில் விரைவில் புதுப்பொலிவு

2 mins read
a5c5df38-6dc4-41a8-89d2-14ae5e52d6e9
தாவரவியல் பூங்காவிற்கு ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுப் பயணிகள் வருகை புரிகின்றனர். - படம்: தமிழக ஊடகம்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை மேம்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஒரு கண்ணாடி மாளிகை அமைக்கப்பட உள்ளது. இதுதவிர பழுதடைந்துள்ள பெரணி இல்லமும் சீரமைக்கப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இதில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சுற்றுப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக விளங்குகிறது.

நூறாண்டு பழைமைவாய்ந்த ஊட்டியில் உள்ள பூங்கா, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இப்பூங்கா 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து தாவரங்கள், மரங்களைக் கப்பல்கள் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு வந்து ஊட்டியில் அறிமுகம் செய்தனர்.

ஆங்கிலேயர்களால் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான வகைகளைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் மரங்கள் செழித்து வளர்ந்து தற்போதும் பூங்காவை அலங்கரித்து வருகின்றன. இங்கு வரக்கூடிய சுற்றுப் பயணிகள் பார்த்து ரசிக்க பூங்காவின் பல்வேறு இடங்களிலும் உள்ள பாத்திகளில் பல்வேறு வண்ண வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இதுதவிர மூன்று கண்ணாடி மாளிகைகள் உள்ளன. இவற்றில் பெரணி தாவரங்கள், கள்ளிச்செடிகள் மற்றும் பல்வேறு வண்ண வண்ண மலர்ச் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 176 ஆண்டு பழமைவாய்ந்த இப்பூங்காவிற்கு ஆண்டுக்குச் சுமார் 30 லட்சம் சுற்றுப் பயணிகள் வருகை புரிந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். ஊட்டியின் அடையாளமாக விளங்கும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை மேம்படுத்த தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிதியைப் பயன்படுத்தி பூங்காவில் நடைபாதை, நவீன கழிவறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அடுத்த ஆண்டு கோடைப் பருவத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், ‘‘ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிதியைக் கொண்டு தாவரவியல் பூங்காவில் புதிதாக ஒரு கண்ணாடி மாளிகை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

“மேலும், அலங்கார மாடங்கள் அமைந்துள்ள இடத்தில் உள்ள பெரணி தாவரங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை பழுதடைந்தும், கண்ணாடிகள் உடைந்தும் காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி கண்ணாடி மாளிகை மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடி மாளிகையும் சீரமைக்கப்பட உள்ளது. இதுதவிர அதிகளவிலான சுற்றுப் பயணிகள் வரும் நிலையில் கழிவறை வசதிகள், நடைபாதை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், கூடுதல் நிதி பெறப்பட்டு இதர வசதிகளும் ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்