கோவை: உலகிலேயே மிக உயரமான 184 அடி உயரமுள்ள முருகன் சிலையை நிறுவும் பணி, மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முருகப் பெருமானின் அருள் எட்டுத்திசைக்கும் பரவும் என்று மருதமலை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இச்சிலைக்கான பீடம் மட்டுமே, 38 அடி உயரத்துக்கு அமைக்கப்படும் என்றும் தனியார் நன்கொடையில் இது உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அறுபடை வீடுகளில் அருள் பாலிக்கும் முருகப் பெருமானை, மருதமலையிலும் தரிசிக்கும் வகையில், சிறிய அளவில் சன்னிதி உருவாக்கப்படுவதாக திரு ஜெயக்குமார் கூறினார்.
அடிவாரத்துக்குள் நுழைந்ததும் குறவன், குறத்தி வரவேற்கும் வகையில் தனிக்கூடம், மிகப்பெரிய வேல், அதன் அருகே நிற்கும் மயில் ஆகியவற்றைச் சுற்றிலும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் மயில் சிலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முருகனை தரிசிக்க படிக்கட்டுகள் வழியாக நடந்தும், கோவில் பேருந்துகள் வாயிலாகவும் மலைக்குச் செல்லலாம். மலைப்படிக்கட்டுகளில் நடந்து செல்லும்போது, இளைப்பாறுவதற்கு ஆங்காங்கே மண்டபங்கள், கழிப்பறை, மருத்துவ வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
184 அடி உயர சிலை நிறுவப்படும் பீடத்துக்குள், முருகனின் அறுபடை வீடுகளின் தல வரலாறுக் கண்காட்சி அமைக்கப்படும்.
“பக்தர்களின் வசதிக்காக, ஐந்து லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர்த் தொட்டி கட்டப்படும். மேலும், மலை அடிவாரத்தில் வன விலங்குகளின் தாகம் தீர்க்கக் குளமும் அமைக்கப்படும்,” என்றார் அறங்காவலர் குழு தலைவர் திரு ஜெயக்குமார்.