சென்னை: தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 19 யானைகள் இறந்துபோயுள்ளன.
இதையடுத்து, யானைகளைக் காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு தமிழகத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 3,170 யானைகள் இருப்பது தெரியவந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 3,063ஆக பதிவானது.
மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய 70 விழுக்காடு யானைகள் நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்நிலையில், தமிழகம் வனத்துறை மேற்கொண்ட தணிக்கை நடவடிக்கையின்போது தமிழகத்தில் யானைகளின் இறப்பு விகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் 19 யானைகள் இறந்து போனது தெரியவந்துள்ளது. அவற்றுள் 18 யானைகள் இயற்கையான முறையிலும் ஒரு யானை விபத்தில் சிக்கியும் மாண்டுபோயின.
ஆக அதிகமாக, நீலகிரி மாவட்டம் முதுமலையில் 8 யானைகளும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 8 யானைகளும் இறந்துள்ளன.
அதேவேளையில் கடந்த 2025ஆம் ஆண்டுக்கான மொத்தப் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது தற்போது யானைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகக் கூற முடியும் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள யானைகளின் எண்ணிக்கை 27,312ஆக இருந்தது.
இந்நிலையில், அவற்றின் தற்போதைய எண்ணிக்கை 22,446ஆக உள்ளது. இதன் மூலம் 4,065 யானைகள் குறைந்துள்ளன.
தமிழகத்தில் யானைகளைப் பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

