தீபாவளிப் பட்டாசுகளை வெடிக்க சென்னை காவல்துறை விதித்த 19 கட்டுப்பாடுகள்

1 mins read
9127d520-a82e-484e-b24d-59497cd42342
தடை செய்யப்பட்ட சீனத்தயாரிப்புப் பட்டாசுகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது என்று கூறியுள்ளார் சென்னை காவல் ஆணையர் அருண். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தீபாவளிப் பட்டாசுகளை வெடிக்க சென்னை காவல்துறை 19 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதிப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்கவும் வெடிக்கவும் வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

அளவுக்கு அதிகமாக ஓசை எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தடை செய்யப்பட்ட சீனத்தயாரிப்புப் பட்டாசுகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது என்று கூறியுள்ளார்.

மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடங்கள், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள் அருகே பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள ஆணையர் அருண், பட்டாசுகளை கொளுத்தி, தூக்கியெறிந்து விளையாடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பட்டாசுகள் மீது தகர டப்பாக்களை போட்டு மூடி, வேடிக்கை பார்க்க வேண்டாம் என்றும் பட்டாசு வெடித்து தூக்கி வீசப்படும் டப்பாக்களால் பல்வேறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரமான பட்டாசுகளை சமையல் அறையில் வைத்து உலர்த்தக்கூடாது. பெரியவர்கள் மேற்பார்வையின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் ஆணையர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்